தஞ்சாவூர்:  தஞ்சாவூரில் கடந்த 18ம் தேதி தனியார் துரித உணவு நிறுவனத்தில், ஏசி கேஸ் நிரம்பும் பணியின் போது, சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் பலியானார். இந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த ஏசி மெக்கானிக் நேற்று (21ம் தேதி) நள்ளிரவு இறந்து விட்டார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

Continues below advertisement

தஞ்சாவூர்,மோரீஸ் கார்னர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில், தரைத்தளத்தில், கே.எப்.சி., உணவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு உணவு தயாரிக்கும், கூடத்தில் உள்ள ஏ.சி.,யில் பழுது ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து ஏசி மெக்கானிக் நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த கணேசன் (43) என்பவர், ஏசிக்கான கேஸ் நிரம்பும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது, சிலிண்டரில் ஏற்பட்ட அழுத்ததினால், வெடித்து சிதறியது. இதில், ஏற்பட்ட அதிர்வில், கட்டடம் முழுவதும் உள்ள ஜன்னல், கதவு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. ஏசி பாகங்களும் வெடித்து சிதறியது.   

Continues below advertisement

இவ்விபத்தில், ஏசி மெக்கானிக் கணேசன் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அப்போது, ஏசி சீரமைப்பு பணியை கண்காணித்துக் கொண்டு இருந்த கேஎப்சி., ஊழியர்களான பொன்னாவரை பகுதியை சேர்ந்த ஜோதி மகன் ரவிராஜ் (27), திருவையாறு அருகே குழிமாத்துார், அந்தோணியார்கோவில் தெருவை சேர்ந்த சவேரியார் மகன் அருண்குமார் (26) ஆகியோர் படுகாயமடைந்தனர். 

மேலும், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவன ஊழியர்களான மானோஜிப்பட்டி, வனத்துர்கா நகரை சேர்ந்த கலியபெருமாள் மகன் கதிரேசன் (24), செங்கிப்பட்டி கீழத்தெருவை சேர்ந்த துரைசாமி மகன் பிரேம்(26), ரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் அஜித்குமார் (22), ஆகியோரும் படுகாயமடைந்தனர். உடன் அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் அன்று இரவே உணவக ஊழியர் ரவிராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து தஞ்சாவூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த விபத்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்து ஏசி மெக்கானிக் கணேசன் சிகிச்சை பலனின்றி நேற்று (21ம் தேதி) நள்ளிரவு இறந்து விட்டார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

பைக்கில் இருந்து தவறி விழுந்து வெல்டிங் பட்டறை உரிமையாளர் பலி

தஞ்சை அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்து வெல்டிங் பட்டறை உரிமையாளர் பலியானார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார் கோட்டையை சேர்ந்தவர் ப. மகேந்திரன் (40). வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேந்திரன் தனது வெல்டிங் பட்டறைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பைக்கில் தஞ்சாவூருக்கு வந்தார்.  பின்னர் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் பொய்யுண்டார்கோட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார். 

தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரை பகுதியில் சென்றபோது திடீரென பைக்கில் இருந்து நிலை தடுமாறி மகேந்திரன் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்த புகாரின்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.