திருவாரூர் அருகே 15 ஆண்டுகளாக பாசனத்திற்கு தண்ணீர் இன்றி தரிசாக மாறி வரும் 960 ஏக்கர் விவசாய நிலங்கள். பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை.
பாசனத்துக்கு தண்ணீர் இன்றி கடந்த 15 ஆண்டுகளாக திருவாரூர் அருகே உள்ள கேக்கரை கிராமத்தில் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர் .திருவாரூர் அருகே கேக்கரை, தெற்கு சேத்தி, வடக்கு சேத்தி, பலவனக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 960 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களுக்கு ஓடம்போக்கி ஆற்றில் ஏ பிரிவு கிளை வாய்க்காலிலிருந்து பி பிரிவு கிளைகளாகப் பிரிந்து வருகின்ற பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் கிடைத்து வந்தது. நாளடைவில் திருவாரூர் நகரத்தின் வளர்ச்சி காரணமாக பாசன வாய்க்காலை ஒட்டிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் அதிகரித்து குடியிருப்புகள் அதிகரித்துவிட்டன.
தற்போது திருவாரூர் நகராட்சியின் முக்கிய வார்டுகளாகவும் அந்த நகர்கள் உருவாகிவிட்டது. இதன் காரணமாக வாய்க்கால் முழுவதும் கழிவு நீரோடைகளாக மாறியுள்ளன. புதர்கள் மண்டி ஆக்கிரமிப்புகள் அதிகரித்து நீர் ஓட்டம் தடைபட்டு விட்டது. இதனை சரி செய்யாத நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் இப்பகுதி விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். பெரும்பாலான நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி விட்டன. ஒரு சில விவசாயிகள் மட்டும் மழையை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளான கூறும்போது… கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் கொண்டு வரும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் செய்தது. சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு தூர்வாரி கொடுத்தது தண்ணீர் வராத காரணத்தால் அந்த வாய்க்கால்கள் பயன்படாத நிலையில் தற்போது தூர்ந்து போய்விட்டன. ஒவ்வொரு ஆண்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை, இதன் காரணமாக எங்களுடைய விவசாய நிலங்கள் முழுவதுமாக காட்டுக் கருவை மரங்கள் மண்டி காணப்படுகின்றன.
மேட்டூர் அணையில் அதிக அளவு தண்ணீர்திறந்து விட்டும் எங்கள் பகுதி கிராமங்களுக்கு தண்ணீர் வந்து சேராத காரணத்தினால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு வேலை தேடி செல்லவேண்டிய நிலை உருவாகி உள்ளது. தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள புதிய அரசு எங்கள் பகுதிக்கு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தி வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி தர வேண்டும் அப்படி செய்தால் 960 ஏக்கர் விவசாய நிலம் மீண்டும் செழிப்போடு காணப்படும் இல்லை என்றால் ஒட்டு மொத்த விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.