தமிழகத்தில் மொத்தம் 18 நகரங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது தமிழகத்தில் மட்டும் 1,10,971 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர் வழக்கமான தேர்வு விதிமுறைகளோடு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் தேர்வு நடக்கிறது. இந்த ஆண்டு முதல்,  தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலால் மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளிலுள்ள 17 மையங்களில் நீட்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 7499 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.




மதியம் 2 மணி அளவில் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் தேர்விற்காக, காலை 11.30 மணி முதல் மாணவர்களை, மையங்களுக்குள் அனுமதித்தனர். பெற்றோர்களுடன் வரும் மாணவர்களுக்கு கிருமி நாசினியும், உடல் வெப்ப சோதனை கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வரிசையில் நிற்க வைத்தனர். பின்னர், மாணவர்கள் சமூக இடைவெளியுடன், நிற்பதற்காக வௌ்ளை வர்ணத்தில் வட்டம் வரைந்து, அதில் ஸ்டிக்கரினால், பாதத்தை தரையில் ஒட்டிவைத்துள்ளனர். அதில் மாணவர்கள் வரிசையில் நின்று, மையங்களுக்குள் சென்றனர். முன்னதாக, மாணவர்கள், மாஸ்க், கையுறை, தளர்வான ஆடைகளை அணிந்து வந்துள்ளனரா என சோதனை செய்தனர்.




தடை செய்யப்பட்ட முழுக்கை சட்டை, பெரிய பட்டன் கொண்ட சட்டைகள், அடர் நிறம் கொண்ட ஆடைகள், ஷூ, நகைகள்,  செல்போன், புளூடூத், இதுபோன்ற தகவல்களை பரிமாறும் வேறு எந்த சாதனங்கள், வாட்ச் அணிந்து வந்துள்ளனரா  என சோதனையிட்டனர். தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களிடம்,  தண்ணீர் பாட்டில், ஹால் டிக்கெட்,  அரசு வெளியிட்டு இருக்கும் போட்டோ ஐடி கார்டு,  சான்றிதழ், பால் பாயின்ட் பேனா ஆகியவை கொண்டு வந்துள்ளனரா என பார்வையிட்டனர். மாணவர்கள், பைகள், சிறுதீனிகள், புத்தகம், பிரின்ட் எடுக்கப்பட்ட பேப்பர்கள் வைத்துள்ளனரா, ஹால் டிக்கெட்டில் கைநாட்டு வைத்துள்ளனரா என பார்வையிட்டனர். தொடர்ந்து மாணவர்களை தேர்வு பகுதிக்கு அழைத்து சென்று, கையெழுத்து பெற்று கொண்டு, மாணவர்களிடம் வேறு ஏதேனும் பொருட்கள் உள்ளதா என மெட்டல்டிடேக்டர் கருவி மூலம் உச்சி முதல் பாதம் வரை சோதனை செய்தனர். மேலும், கழுத்தின் உள்ளே பேன்ட் பாக்கெட், பின் பாக்கெட், இடுப்பு, கழுத்து உள்ளிட்டவைகளில் கடுமையான சோதனையிட்டதால், மாணவர்கள் வேதனைக்குள்ளானார்கள்.




இதே போல் மாணவிகள், கழுத்தில் நகைகளோ, ஜெயின் அணியாமலும், கையில் வளையல் இல்லாமலும், கூந்தலை லுாசாக விட்டு வந்திருந்தனர். மாணவர்களுக்கு செய்த சோதனை போல் மாணவிகளுக்கும் சோதனை நடைபெற்றதால், அவர்களின் பெற்றோர்கள் மிகவும் வேதனையடைந்தனர். தஞ்சாவூரில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்விற்கு முன்பே பல்வேறு சோதனைகள் பேரில் மனஉளைச்சலுக்குள்ளாகி, தேர்வு எழுத சென்றுள்ளனர் என பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். பள்ளி வளாகத்தின் முன், நீட்தேர்வு எழுத வந்த மாணவி, தேர்வில் நல்ல முறையில் எழுதி, டாக்டராக வேண்டும் என குறிக்கோளுடன், தந்தையின் உறுதுணையோடு, இறுதி கட்டமாக புத்தகங்களை படித்தார்.