தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல தனியார் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், லாபத்தின் மூலம் அதிகளவில், பணம் வழங்குவதாக, கூறி மோசடி செய்து விட்டதாக, முதலீடு செய்த பாதிக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பங்குதாரர்கள், தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்தனர். தஞ்சாவூர், ரஹ்மான் நகரைச் சேர்ந்தவர் கமாலுதீன். ராஹத் பஸ் டிரான்ஸ்போர்ட் நடத்தி வந்தார். பஸ் தொழிலில் முதலீடு செய்தால், அதிகளவில் பங்கு தருவதாகப் ஏராளமானவர்களிடம் சுமார் 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை கமாலுதீன் வசூல் செய்து, மாதந்தோறும் 2 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பங்கு தொகையை வழங்கி வந்தார். பின்னர், கடந்த இரண்டு ஆண்டாகப் பங்குதாரர்களுக்கான பணத்தை வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கமாலுதீனிடம், பங்குதாரர்கள் கேட்ட போது, கொரோனா தொற்று காரணமாகப் பஸ் சேவை இயங்காததால், பங்கு பணத்தை வழங்க முடியவில்லை. விரைவில் பங்கு பணத்தை வழங்கி விடுவதாகக் கூறி காலம் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று,மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட கமாலுதீன் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இறந்து விட்டார்.
ராஹத் நிறுவனத்தின் சொத்து வாரிசுகளான கமாலுதீனின் மனைவி ரேஹானா பேகம், அவரது மகன்களான அப்சல் ரஹ்மான்ஹாரிஸ் ஆகியோர் உள்ள நிலையில், அவர்களைப் பங்குதாரர்கள் நேரில் சந்திக்க முயன்றனர். ஆனால் அவர்கள் சந்திக்க மறுத்து, இதற்கு எங்களுக்கும் தொடர்பு இல்லை எனக் கூறி,அனுப்பி விட்டனர்.
இந்நிலையில், தமிழகத்தில் அதிகளவில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில், பஸ்சில் முதலீடு செய்வதற்காகத் தனியாகப் பல ஏஜென்ட்கள் மூலம், பணத்தைத் வசூலித்த கமாலுதீன், அந்த வசூல் செய்த பணத்தில், பஸ்களை வாங்காமல், வங்கிகளில் கடன் பெற்று அதன் மூலம், 130 பஸ்களை வாங்கியுள்ளார். பின்னர், பங்குதாரர்களின் முதலீடு மூலம், தனது மனைவி, மகன் மற்றும் பினாமி எனப் பல்வேறு பெயர்களில், பண்ணை வீடுகள், பள்ளிக்கூடம், வெளிநாட்டில் ஹோட்டல்கள், பிரிண்டிங் பிரஸ் எனச் சுமார் 400 கோடிக்கும் மேலாக, கமாலுதீன் சொத்துக்களை வாங்கியது தெரியவந்தது. இதைப் பாதிக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு அளிக்கக் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், கமாலுதீன் எங்களிடம் கூறும் போது ராஹத் பஸ் சர்வீஸ்சில், 1 லட்சம் முதலீடு செய்தால், பங்கு தொகை 2 ஆயிரம் ரூபாய் எனவும், 5 லட்சம் முதலீடு செய்தால் 10 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்தார். இதனை நம்பிய நாங்கள் முதலீடு செய்த நிலையில், முதல் மூன்று மாதம் முறையாகப் பணம் கிடைத்தது. அதன் பிறகு பங்கு தொகை கொடுக்கவில்லை. இது தொடர்பாக அவரது மறைவுக்குப் பிறகு அவர் குடும்பத்தினரிடம் கேட்டால், பணம் இல்லை எனக் கூறுகின்றனர். இதில் தமிழகம் மட்டும் இல்லாமல், வெளிநாட்டில் உள்ளவர்கள் எனச் சுமார் 12 ஆயிரம் பேர், 700 கோடி அளவிற்கு முதலீடு செய்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றனர்.