திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக 7 லட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடி பணிகளை தொடங்குவதற்காக கடந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது. இதன் காரணமாக ஒரு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளிலும் 3 லட்சத்து 72 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளிலும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.



 

ஆண்டுதோறும் அக்டோபர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த ஆண்டு ஒரு மாதம் முன்கூட்டியே செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதனை ஒட்டி திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளிடமிருந்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பா நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடமிருந்து 522 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக 5,30,000 மெ.டன் நெல் இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்தமாக இதுவரை 7 லட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

 

தற்பொழுது அறுவடை பணிகள் 95 சதவீதம் முடிவடைந்த நிலையில் ஓரிரு இடங்களில் மட்டும் தற்பொழுது விவசாயிளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்காமல் இருக்கும் வன்னம் உடனடியாக நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து கிடங்கிற்கு எடுத்துச் சென்று விடுவதாகவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு ஊழியர்கள் கையூட்டு பெறுவது சரியா வந்தால் அவர்களை உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் மேலும் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன இதில் சம்பந்தப்பட்ட விவசாயிகள் தங்களது புகார்களை தெரிவிக்க வேண்டும் மேலும் மாவட்டம் முழுவதும் 522 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் தொடர்ந்து அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் யாரேனும் ஊழியர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என மாவட்ட முதுநிலை மண்டல மேலாளர் ராஜ ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.