திருவாரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி காணொளி மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடரின் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி கொரோனா விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொதுமக்களுக்காக காவல்துறையினர் இரவு பகல் பாராமல் ஒருவரையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக பணியாற்றி வரும் சூழலில், பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி ஊரடங்கு கடைபிடிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அத்தியாவசிய தேவை இன்றி பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்து விடவும் முகக் கவசம் கிருமிநாசினிகள் போன்றவற்றை கட்டாயம் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் ஒத்துழைத்தால் திருவாரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக நிச்சயமாக மாறும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



மேலும் 144 ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 640 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு 144-தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஊடங்கு உத்தரவானது திருவாரூர் மாவட்டம் முழுவதும் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 59-இடங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தொடர் வாகன தணிக்கைகள் நடைபெற்று வருகிறது. 40 -இருசக்கர வாகன ரோந்துகள், 04-நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் இரவு பகலாக இயக்கப்பட்டு வருகின்றன. 22-இடங்களில் பிக்கெட்டிங் எனப்படும் நிலையான ரோந்து அமைக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு பணிகளில் காவல் அதிகாரிகள், காவலர்கள்மற்றும் ஊர்காவல்படை காவலர்கள் என 1000 பேர் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.  பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் பாதுகாப்பு பணிகள் அனைத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழியின் நேரடிப்பார்வையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை முற்றிலும் தடுக்கவும், பொதுமக்களின் தேவையில்லாத நடமாட்டத்தை குறைக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் கடந்த மூன்று தினங்களாக வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



இதில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த 640 பேர் கைது செய்யப்பட்டு 640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றித்திரிந்த நபர்கள் மீது 8765-வழக்குகளும் சமூக  இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்கள் மீது 545 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு ரூ.20,25,500 அபராதம் வசூலிக்கப்பட்டு அரசுக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.


மேலும் இந்த  ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.