Thanjavur Iambon idols: தஞ்சாவூரில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான 6 ஐம்பொன் சிலைகள் கடத்தல் கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.


போலீசார் தீவிர கண்காணிப்பு:


தமிழகத்தில் பழமையான சிலைகளைப் பதுக்கி வைத்திருந்து விற்பவர்கள் பற்றிய தகவல்கள் கடந்த ஒருவார காலமாக சேகரிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பல சிறப்பு படைகள் அமைக்கப்பட்டது. இந்த சிறப்படை அதிகாரிகள் பல்வேறு இடங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். 3 நாட்களாக விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர் பகுதியில் முகாமிட்டு சிலை கடத்தல் குறித்து பல்வேறு கட்ட விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் கடந்த ஆறாம் தேதி ஏடிஎஸ்பி பாலமுருகன், ஆய்வாளர் வெங்கடேசன். உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ் கண்ணன், பாண்டியன். காவலர் சிவபாலன் ஆகியோர் கொண்ட குழுவினர் தஞ்சாவூர் புதுக்குடி அருகே கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.


6 ஐம்பொன் சிலைகள் மீட்பு:


சோதனையின்போது,  சந்தேகப்படும்படியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சிறப்புப்படை போலீசார் சோதனை செய்தனர். அதில் பழமையான 3 அடி உயர திரிபுராந்தகர் சிலை, 2.75 அடி உயர வீணாதார தட்சிணாமூர்த்தி சிலை, 3.25 அடி உயர ரிஷபதேவர் சிலை, தலா 2.75 அடி உயர மூன்று அம்மன் சிலைகள் என ஆறு உலோக சிலைகள் இருந்தன. போலீசார் விசாரித்த போது, காரில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த சிலைகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.


கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது:


தொடர்ந்து காரை ஓட்டி வந்த, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன்(42), மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை கிராமத்தை சேர்ந்த லட்சுமணன்(64) ஆகிய இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.  அதில், லட்சுமணன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், புதிய வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் அமைக்க பள்ளம் தோண்டியுள்ளார். 


அப்போது இந்த 6 ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன. ஆனால் இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் சிலைகளை தன் வீட்டிலேயே பதுக்கி வைத்துள்ளார்.  இது குறித்து தனது நண்பர் ராஜேஷ் கண்ணனிடம் தெரிவித்துள்ளார். பிறகு ராஜேஷ்கண்ணன் தனது நண்பரும், லட்சுமணனின் மருமகனுமான சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த திருமுருகன்(39) சிலைகள் குறித்து தெரிவித்துள்ளார். பிறகு, ராஜேஷ் கண்ணன் திருமுருகனுடன், லட்சுமணன் வீட்டிற்கு வந்து சிலைகளை பார்த்துள்ளார். 


சிலைகளை விற்பனை செய்ய முயற்சி:


மூவரும் சேர்ந்து ஐம்பொன் சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்க திட்டமிட்டனர்.  இதற்கிடையில், சமீபத்தில் ராஜேஷ் கண்ணனுக்கு சிலைகளை விற்கவும், வெளிநாடுகளுக்கு கடத்தவும் தொடர்பு கிடைத்துள்ளது. அதன்படி, ராஜேஷ் கண்ணனும், திருமுருகனும் கடந்த 5ம் தேதி நள்ளிரவு அவரது காரில் மயிலாடுதுறை கொருக்கை கிராமத்தில் உள்ள லட்சுமணன் வீட்டிலிருந்து, சிலைகளை எடுத்துக்கொண்டு  திருச்சி வழியாக சென்னை செல்வதற்காக வந்தகொண்டிருந்தபோது தான் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்கள் கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில்  அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  தொடர்ந்து மூன்று பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.