தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்த 18 வயதிற்குட்பட்ட 58 குழந்தைகளுக்கு நிவாரண நிதியுதவியாக 1.80 கோடி வழங்கப்பட்டது. சமூக பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிவாரண நிதியுதவிக்கான காசோலைகளை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வழங்கினார். கொரோனா நோய் தொற்றுக்கு பெற்றோர்களை இழந்த 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். தாய், தந்தை ஆகிய பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா 5 லட்சமும், தாய் அல்லது தந்தை என பெற்றோர்களில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு தலா 3 லட்சமும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில், தஞ்சை மாவட்டத்தில் தாய், தந்தை ஆகிய பெற்றோர் இருவரையும் இழந்த 10 குழந்தைகள், தாய் அல்லது தந்தை என பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த 115 குழந்தைகள் என மொத்தம் 125 குழந்தைகள் அடையாளங் காணப்பட்டனர். அவர்களில், முதல் கட்டமாக, பெற்றோர் இருவரையும் இழந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.15 லட்சம், பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த 55 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ. 1.65 கோடி என மொத்தம் 58 குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.1.80 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டது.
நிவாரண உதவி தொகைக்கான காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், இத்தொகையை தங்களுடைய குடும்பச்செலவுக்கு பயன்படுத்தாமல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், கல்விக்கும், மேல்படிப்பிற்காக செலவு செய்து, அக்குழந்தைகள் வாழ்வு சிறப்பாக அமைந்திட வேண்டும் என்ற நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் பேசுகையில், ஒரு சில மாவட்டங்களில் உள்ள பெற்றோர்கள் அரசால் நிவாரண உதவியாக வழங்கப்பட்ட பணத்தை எடுத்து செலவு செய்துள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதுபோல எந்த சம்பவம் நமது தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்துவிடக் கூடாது. தங்கள் குடும்பத்தில் நடந்த துயரத்தினால் பல கஷ்டங்கள் இருக்கக்கூடும். இருந்தபோதிலும், இத்தொகையினை குடும்ப செலவிற்காகப் பயன்படுத்தாமல் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பயன்படும் வகையில் செலவினங்களை அமைத்திட வேண்டும் என்றார்.
முன்னதாக, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ஆவின் பால் விற்பனை நிலையம் வைப்பதற்கான ஆணைகளை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், குழந்தைகள் நலக்குழுத் தலைவர் உஷா நந்தினி, பாதுகாப்பு அலுவலர் அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.