தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைக்கு முதல் இடம் உண்டு. அத்தகைய புத்தாடைகள் விற்பனை செய்யும் துணிக்கடைகள் அதிகரித்துள்ள இச்சூழலில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக துணிக்கடைகள் பல்வேறு பரிசுகளை அறிவிப்பது வழக்கம். அதில் துணி வகைகள், வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக அறிவித்து பரிசுக் குலுக்கல் மூலம் வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருவார்கள். அந்தவகையில் புது மாதிரியாக திருவாரூரில் சாரதாஸ் என்ற துணிக்கடை ஒன்று பரிசுப் பொருட்களில் இரண்டாவது பரிசாக நான்கு பேருக்கு ஆடு தருவதாக தெரிவித்துள்ளது திருவாரூர் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.



 

இந்த துணி கடையை மணிமுருகன் என்பவர் நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக மனைவி நந்தினி துணிக்கடையில் பணியாற்றுகிறார். இவர்கள் இருவரும் கடந்த 17 வருடமாக திருவாரூரில் இந்த ஜவுளி கடை வைத்துள்ளனர். சிறிய கடையாக தொடங்கிய இந்த ஜவுளி கடை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று தற்போது மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை செய்யும்  ஜவுளிக்கடை யாக உள்ளது. இந்த ஜவுளிக்கடையில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக தீபாவளி பண்டிகை பரிசு குலுக்கல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் பரிசு ஒருவருக்கு 4 கிராம் தங்கம், இரண்டாவது முதல் நான்காவது பரிசு வரை 4 பேருக்கு ஆடு. 5 வது பரிசு 25 பேருக்கு பட்டுப்புடவை பரிசாக அறிவித்துள்ளார். இவற்றில் ஆடுகளை பரிசாக அறிவித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.



 


 

இதுகுறித்து ஜவுளிக்கடை உரிமையாளர் மணிமுருகன் கூறியதாவது: எனது ஜவுளி கடைக்கு வரும் அனைவரும் கிராமப்புறத்தைச் சார்ந்தவர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. பலரும் வேலை இழந்து  சொந்த ஊருக்கு திரும்பி விட்டார்கள். அவர்களில் பலர் சுயமாக வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முனைப்பு காட்டி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் யாரேனும் எனது ஜவுளிக்கடையில் துணி வாங்கி இருந்தால் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆடு வழங்குவதன் மூலம் அவர்களது கவனம் ஆடு வளர்ப்பில் செல்லக்கூடும். இதுவே தொடக்கப்புள்ளியாக கூட அமையலாம் என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு, நானும் எனது மனைவியும் கலந்து பேசி இந்த பரிசை அறிவித்தோம் என தெரிவித்தார்.