திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இந்த நிலையில் திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தின் தென்கரை பகுதி சுற்றுச்சுவர் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதனை உடனடியாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டார். சுற்றுச்சுவரை உடனடியாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் சுற்றுச் சுவரின் வலு தன்மை குறித்து வல்லுனர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று திருச்சி துவாக்குடியில் இருந்து தேசிய தொழில் நுட்பக் கழக பேராசிரியர்கள் முத்துக்குமரன், சரவணன் ஆகியோர் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த இடத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தனர். கமலாலய குளத்தில் படகு மூலம் பயணித்து தென்கரை வடகரை உள்ளிட்ட 4 சுற்று சுவர்களையும் ஆய்வு செய்தனர். மேலும் சுற்றுச் சுவர் கட்டப்பட்ட விபரங்கள் குறித்து இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர் இதற்கு முன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விவரத்தையும் அந்த இடத்தில் புதியதாக சுற்றுசுவர் கட்டப்பட்ட இடத்தையும் வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் ஆய்வாளர் சிதம்பரம், கோட்டாட்சியர் பாலச்சந்திரன், பொதுப்பணித்துறை கட்டட கட்டுமானப்பிரிவு செயற்பொறியாளர் மோகனசுந்தரம், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்த ஆய்வுக்குப் பின்னர் பேராசிரியர் முத்துக்குமரன் கூறியதாவது. கமலாலயக் குளத்தில் முதல் கட்ட ஆய்வு நடைபெற்றுள்ளது. மேல் கரை வலுவாகவுள்ளது. மற்ற கரைகள் வலுவிழந்துள்ளது. மேல் கரையை தவிர மற்ற மூன்று பக்க சுற்று சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆகவே மீண்டும் ஆய்வு நடைபெற உள்ளது. சுற்று சுவரின் தொன்மை தன்மை மற்றும் வலுத்தன்மை ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும், மேலும் 20 நாட்கள் முதல் ஒரு மாத காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும். தென்கரை சுற்றுச்சுவர் உடைவதற்கு கனமழை மட்டுமின்றி தென் கரையின் வழியாக கனரக வாகனங்கள் சென்று வந்ததே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததற்கு காரணமாகும் என்றார்.