தஞ்சாவூரில் மழையால் வீடு இடிந்து 5 வயது சிறுவன் மற்றும் மூதாட்டி உயிரிழப்பு

சின்னமுத்தாண்டிப்பட்டியை சேர்ந்தவர் சலீம். இவரது மகன் அசாருதீன் (5), பூங்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த வைத்தி என்பவர் மனைவி சிவபாக்கியம் (85) ஆகியோர் உயிரிழப்பு

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பலத்த மழை  மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே சின்னமுத்தாண்டிப்பட்டியை சேர்ந்தவர் சலீம். இவரது மகன் அசாருதீன் (5), ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிலையில், வீட்டின் சுவர் மழையால் ஊறி போயி இருந்துள்ளது. இதனால் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டு மண் சுவர் இடிந்து திடிரென விழுந்தது. இதனையறிந்த,  சலீம், தன் மேல் விழுந்த மண் சுவரை அகற்றி விட்டு,  அலறி அடித்து கொண்டு, சுவரை அகற்றி விட்டு, தன் மகன் அசாரூதீனை மீட்கும் போது, இடிபாடுகளில் சிக்கி அசாருதீன் இறந்து கிடந்தான். காயமடைந்த சலீமை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

Continues below advertisement


இதே போல், பேராவூரணி அருகே பூங்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த வைத்தி என்பவர் மனைவி சிவபாக்கியம் (85). தனது இளைய மகன் ரவிச்சந்திரனின் மாடி வீட்டு அருகே, தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தார். மழையினால் நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் மண் சுவர் இடிந்து, சிவபாக்கியம் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று காலை தகவலறிந்த பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.


கும்பகோணம் வட்டத்திற்குட்பட்ட தாராசுரம், சாக்கோட்டை, மருதாநல்லூர், திப்பிராஜபுரம், சேஷம்பாடி, தில்லையம்பூர், கொருக்கை, தேனாம்படுகை, ஆரியபடைவீடு, பட்டீஸ்வரம், சோழன்மாளிகை, திருவலஞ்சுழி, கொரநாட்டுக்கருப்பூர், ஏரகரம் மற்றும் கும்பகோணம் நகராட்சி பகுதிகளில், வடகிழக்கு பருவமழையின் காரணமாக 39 குடிசை வீடுகள், 7 ஓட்டு வீடுகள் சேதமடைந்தது. 


பாதிக்கப்பட்ட 46 குடும்பத்தினர்களுக்கு, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலத்தில், தமிழ்நாடு அரசின் நிவாரண நிதியாக, 39 குடிசை வீடுகளுக்கு தலா ரூ.4,100 எனவும், 7 ஓட்டு வீடுகளுக்கு தலா 5,200 எனவும் மொத்தம் 1,96,300க்கான காசோலைகளையும், புடவை மற்றும் வேட்டிகளையும், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு வழங்கினார். அருகில், நகர செயலாளர் தமிழழகன், ஒன்றிய செயலாளர் பாஸ்கர், வட்டாட்சியர் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி டி.என்.கரிகாலன், பகுதி செயலாளர் டி.கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சாமி.முருகையன்,கிளை செயலாளர் கீழசேத்தி ரவி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளனர்.

Continues below advertisement