எண்ணும் எழுத்தும் திட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் 48 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.



கற்றலில் ஏற்பட்ட இடைவெளியை குறைக்க தொடங்கப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1391 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, இதன்மூலம் 48,293 மாணவர்கள் பயனடைகின்றனர் என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.6.2022 அன்று பள்ளி கல்வி துறை சார்பில் 2022 -23ம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட இருக்கும் எண்ணும் எழுத்தும் என்ற முன்னோடி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.





வரும் 2022-23 கல்வி ஆண்டில் தொடங்கப்பட இருக்கும் இத்திட்டத்தின் இலக்கு 2025ல் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் எழுத்தறிவு எண்ணறிவும் கிடைத்திட வேண்டும் என்பது குறிக்கோளாகும். அதற்கேற்ற வகையில் 1முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் செயல்களிலும் விளையாட்டு வழியிலும் குழந்தைகள் கற்றாலும் அவர்களின் கற்கும் திறனை வைத்து அவர்களை குழுக்களாகப் பிரித்து பாடங்களை கற்றுத் தருவது இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளதாவது:

எண்ணும் எழுத்தும் திட்டம் ஒரு மகத்தான திட்டம் ஆகும். கொரோனா பெருந்தொற்று காரணமாக தொடக்க வகுப்புகளில் குறிப்பாக 1 முதல் 3ம் வகுப்பு குழந்தைகள் தங்கள் வகுப்பிற்குரிய கற்றல் நிலையை அடையவில்லை. எனவே குழந்தைகள் பெற்ற கற்றல் இழப்புகளை மீண்டும் பெறுவதற்கு உதவியாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.





தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள முன்னோடித் திட்டம் எண்ணும் எழுத்தும் திட்டமாகும். எண்ணும் எழுத்தும் திட்டமானது 2022- 23ம் கல்வி ஆண்டு முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1391 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 48,293 மாணவர்கள் பயனடைகின்றனர்.

இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்பு வரை கற்பிக்கும் 1919 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதல் பருவத்திற்கான 11,898 ஆசிரியர்கள்கையேடு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு 1,61,558 அரும்பு, மொட்டு மற்றும் மலர் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டில் செயல்பாடுகளின் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.