இலங்கையை சேர்ந்தவருக்கு இந்திய குடியுரிமை உள்ளதாக போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் எடுத்த விவகாரத்தில் திரைப்பட இயக்குனர் மற்றும் மூன்று அரசு ஊழியர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கூப்பாச்சி கோட்டை முகவரியில் வசிப்பதாக கூறி இலங்கையை சேர்ந்த கஜன் என்பவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு பாஸ்போர்ட் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் க்யூ பிரிவு காவல்துறையினர் கஜன் என்பவரின் பாஸ்போர்டை  சோதனை செய்தததில் கூப்பாச்சி கோட்டை முகவரி இருந்ததால் சந்தேகம் அடைந்த க்யூ பிரிவு காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். இந்த விசாரணையில் மன்னார்குடியில் ஆட்களை வெளிநாடுகளில் உள்ள வேலைகளுக்கு அனுப்பி வைக்கும்  டிராவல் ஏஜென்ட் நிறுவனம் நடத்தி வந்த இந்திரஜித், கூப்பாச்சி கோட்டையை சேர்ந்த பிரபாகரன், சென்னையை சேர்ந்த குண்டக்க மண்டக்க திரைப்பட இயக்குனர் அசோகன், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கணினி உதவியாளராக பணியாற்றிய ரவிச்சந்திரன், இளநிலை உதவியாளராக பணியாற்றிய அசோக்குமார், கூப்பாச்சிக் கோட்டை தபால்காரர் மகாராஜன்,சென்னையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் லோகநாதன், கூப்பாச்சிக் கோட்டை ஈசன், பத்மநாபன் ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதையடுத்து அவர்கள்  மீது க்யூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 




இதுதொடர்பான வழக்கு விசாரணை கடந்த பத்து ஆண்டுகளாக திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில்  கடந்த மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் எஸ்.பி அலுவலகத்தில் பணியாற்றிய ரவிச்சந்திரன், அசோக்குமார், மகாராஜன், லோகநாதன் ஆகிய நால்வருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், பிரபாகரன் மற்றும் திரைப்பட இயக்குனர் அசோகன் ஆகிய இருவருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் இந்திரஜித், ஈசன், பத்மநாபன் ஆகிய மூவரும் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டனர். இந்திரஜித் திரைப்பட இயக்குனர் அசோகனின் அக்காள் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்காக ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் அவர்களது மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து இன்று  மீதமுள்ள ஆறு பேரையும் போலீசார் கைது செய்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்த பின்னர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். 




இந்த வழக்கின் பின்னணி குறித்து காவல்துறையினரிடம் கேட்ட பொழுது, கடந்த 2012 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கூப்பாட்சிகோட்டை பரவக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் போலி பாஸ்போர்ட் தயாரித்து அதன் மூலம் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ளனர். குறிப்பாக ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் அங்கு உள்ள அகதிகளை சோதனை செய்த பொழுது பல்வேறு நபர்களிடம் பாஸ்போர்ட்டில் உள்ள முகவரி முன்னுக்குப் பின்னாக இருந்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் பல்வேறு தகவல்களை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கஜன் என்பவர்  குறித்து கியூ பிரிவு காவல்துறையினருக்கு மண்டபம் காவல்துறையினர் தகவல் கொடுத்ததன் அடிப்படையில் போலி பாஸ்போர்ட் தயாரித்தவர்கள் யார் யார் என அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த போலிப் பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பல் எங்கு எங்கு உள்ளார்கள் இதில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது