தஞ்சாவூரில் 1982 முதல் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளின் நாற்பதாவது ஆண்டு நினைவு தின உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தனியார் முதலாளிகளுக்கு பொதுத்துறை பங்குகளை அளிக்க கூடாது, சர்வதேச நிதி மூலதன நிறுவனத்தின் நிபந்தனைகளை,  மத்திய அரசு ஏற்க கூடாது என்ற கோரிக்கைகளை முன் வைத்து மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக இடதுசாரி தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கடந்த 1982 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பினை ஏற்று அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள், மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொது வேலை நிறுத்தத்தில்  முழுமையாக பங்கேற்றனர்.       




வேலை நிறுத்தம் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடந்தது. ஆங்காங்கே கலவரங்கள் ஏற்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த மன்னார்குடி ஞானசேகரன், மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த நாகூரான், அஞ்சான் ஆகிய மூவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் முன்னின்றனர். வேலை நிறுத்தத்தை முறியடிக்க முயன்ற காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. அந்த துப்பாக்கி சூட்டில் மூவரும்  பலியானவர்கள். அவர்கள் தியாகத்தைப் போற்றும் வகையில் ஜனவரி 19 ஆம் தேதி ஆண்டுதோறும் நினைவு தினம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


தஞ்சாவூர் கீழராஜவீதி ஏஐடியூசி அலுவலகம் முன் நடைபெற்ற தியாகிகளின் 40 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் தலைமை வகித்தார். அப்போதிருந்த அரசியல் சூழ்நிலைகள் பற்றிய நிலைமைகள் குறித்தும், துப்பாக்கிச் சூட்டில் பலியான ஞானசேகரன் அஞ்சான்,  நாகூரான் ஆகிய தியாகிகளின் வீரம் செறிந்த மரணம் குறித்தும் ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார் சிறப்புரையாற்றினார்.




வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க.அன்பழகன், நுகர்பொருள் வாணிப கழக சங்க மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன், அரசு போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் துரை. மதிவாணன்,ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர். பி.முத்துக்குமார் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.     இதில் மத்திய மோடி அரசு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறியதை கண்டித்தும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நாட்டின் இயற்கை -கனிம வளங்களை தாரைவார்ப்பதை கண்டித்தும், விவசாயிகளுக்கு எதிராகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் சட்டம் இயற்றப்படுவதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.  



  


ஒன்றிய மோடி அரசு பொது மக்களுக்கு சேவை செய்யும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று பணத்தை திரட்டும் தேசிய பணமயமாக்கல் திட்டத்தை கைவிடும் வரை உறுதியான போராட்டத்தை ஒருங்கிணைந்து முன்னெடுப்பது என்றும், ஒன்றிய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்து வரும் பிப்ரவரி 23 ,24 தேதிகளில் நடைபெறும் 48 மணி நேர நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை தஞ்சை மாவட்டத்தில் வெற்றிபெற செய்வது என்றும் தியாகிகள்  நினைவாக உறுதியேற்க்கப்பட்டது.