தஞ்சாவூர்: கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 14-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 4,200 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும், அதனுடன் இணைந்த 35,000 ரேஷன் கடைகளும் முழு அளவில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் மண்டல அளவிலான போராட்ட ஆயத்த கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் எம்.மணிவண்ணன் தலைமை வகித்தார். மாநில கவுரவ பொதுச் செயலாளர் சி.குப்புசாமி சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் எஸ்என்.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ரேஷன் கடைகளில் தற்போது புளுடூத் மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு விற்பனை மேற்கொள்ளும்போது ஒருவருக்கு மட்டும் 8 நிமிடங்களிருந்து 10 நிமிடம் வரை ஆகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு மட்டுமே பொருட்கள் விநியோகம் செய்ய முடிகிறது. இதனால் காலதாம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் இடையே மோதல்கள், தகராறு ஆகியவை ஏற்படுகிறது. குறிப்பாக கிராமப்பகுதிகளில் கூலி வேலைக்கு செல்லும் மக்களுக்கு இதனால் ஒருநாள் சம்பளத்தை இழந்து ரேஷன் பொருட்கள் வாங்க காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் ரேஷன் கடை பணியாளர்களிடம் தகராறு மேற்கொள்கின்றனர். இதை தவிர்க்க புளுடூத் முறையை நீக்க வேண்டும்.
நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிலிருந்து முதன்மை சங்கங்களுக்கு நகர்வு செய்யப்படும் பொருட்களில் எடை குறைவு ஏற்படுவதை தவிர்க்க, சரியான எடையில் பொருட்களை வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் 40 சதவீத பெண்களும், 5 சதவீத மாற்றுத்திறனாளிகளும் பணியாற்றுவதால், ரேஷன் கடைகளில் உள்ளவர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு எடையாளர் ஒருவரை அனுமதிக்க வேண்டும்.
அதுவரை வெளிப்பணி மூலம் உதவியாளர் ஒருவரை பணியமர்த்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 14-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 4,200 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், அதனுடன் இணைந்த 35,000 ரேஷன் கடைகளும் முழு அளவில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்டச் செயலாளர் டி.கலியமூர்த்தி நன்றி கூறினார்.
ரேஷன்கடைகளில் மிகவும் பொதுவான பிரச்னை கைரேகைகள் சரியாக பதிவாகவில்லை என்று கூறப்படுவதால் பொருட்கள் வாங்க வந்தவர்கள் காத்திருக்கும் நிலைதான் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் ரேஷன் கடை பணியாளர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் இது மோதலை ஏற்படுத்தும் அளவிற்கு மாறும் நிலையை உருவாக்குகிறது. இதனால் கிராமப்பகுதிகளில் பலரும் ரேஷன் பொருட்கள் வாங்கும் அன்று கூலி வேலைக்கு செல்ல முடியாத நிலையே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.