தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச்சம்பவங்களை உடனடியாக விசாரித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்காக மகிளா நீதிமன்றம் கொண்டுவரப்பட்டது. அதனடிப்படையில் மகிளா நீதிமன்றத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் அதிகரித்து வருகின்றன.



இந்த குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மகளிர் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தால் அடுத்த சில மணிநேரங்களில் விசாரணை செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். பின்னர் இது சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 32 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்துள்ள கோவிலான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (22). இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் 2019-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி  புகார் அளித்தனர். புகாரின் பேரில் அரவிந்த் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில்  நீதிபதி சுந்தரராஜன்  தீர்ப்பளித்தார். அதன்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அரவிந்த்க்கு 32 ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பிற்கு பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு காவல்துறையினர் கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும், என்ற கோரிக்கையையும் பெற்றோர் முன் வைத்தனர்.

 

இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும், திருவாரூர் மாவட்டத்தில் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடைபெற்று வரும் அனைத்து வழக்குகளையும் விரைவாக முடிக்க காவல்துறை சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை கிடைப்பதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொள்ளும் எனவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.