தஞ்சாவூர்: பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை தனியார் மண்டபத்தில் கொண்டு போய் வைத்த போலீசார் மதியம் வரை உணவு வழங்காததால் அங்கேயும் போராட்டம் நடத்தி உள்ளனர்.

Continues below advertisement

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூரில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 140 பெண்கள் உள்ளிட்ட 300 ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சார்பில், நேற்று தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, டிட்டோஜாக் மாவட்ட பொருளாளர்கள் ஆர்.விஜயகுமார், ந.நாகராஜன், ம.ரகு, பொ.முத்துவேல், த.முருகானந்தம் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தினை விளக்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதியழகன் விளக்கவுரையாற்றினார்.

Continues below advertisement

போராட்டத்தில், தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆரியர்களுக்கும் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.  ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நிரப்ப வேண்டும். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தகுதித் தேர்வு தொடர்பான வழக்கை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறத் தகுதித் தேர்வு தேவையில்லை என்பதை தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவித்து முடிவுக்கு கொண்டு வந்து தலைமை ஆசிரியர் உட்பட பதவி உயர்வு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பினர். முன்னதாக பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து பேரணியாக வந்து ஆற்றுப்பாலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த 140 பெண்கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர். 

இந்த போராட்டத்தில் பங்கேற்க தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சுமார் 2,400 ஆசிரியர்கள் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்துள்ளதாகவும், ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் பிற நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தஞ்சாவூர் மேற்கு போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர். இதற்கிடையில் மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்த ஆசிரியர்கள் யாருக்கும் மதியம் 3 மணி வரை போலீசார் உணவு வாங்கித் தரவில்லையாம். இதனால் சோர்ந்து போன ஆசிரியர்கள் அங்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. மேலும் நாளை நடைபெறவுள்ள போராட்டத்தினை சீர்குலைக்க போலீஸார் இவ்வாறு செய்வதாகவும் கைதான ஆசிரியர்கள் தரப்பில் தெரிவித்தனர்.