பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்தவரிடம் இருந்து ரூ.3.37 லட்சம் பெற்று மோசடி செய்த மர்மநபர்  குறித்து தஞ்சை சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா முள்ளங்குடி தோப்புத்தெருவை சேர்ந்த செல்வதுரை என்பவரின் மகன் சுதாகர் (41). இவர், கடந்த சில மாதங்களாக வெளிநாடு செல்வதற்காக முயற்சி செய்து வந்துள்ளார். அப்போது, அவருடைய பேஸ்புக்கில் வந்த வெளிநாட்டு வேலை இருப்பது தொடர்பாக வந்த விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். அதில் பேசியவர்கள், கனடாவில் வேலை உள்ளது, உங்களுக்கு கை நிறைய சம்பளம் கிடைக்கும், நாங்கள் கேட்ட ஆவணத்தை அனுப்பி வைத்தால், உடனடியாக செல்லலாம் என ஆசை வார்த்தைகளை பேசி, நாங்கள் கேட்கும் ஆவணங்கள் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து நடைமுறை செலவிற்காக பணம் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அவர்களின் பேச்சை நம்பிய சுதாகர், செல்போனில் பேசியவர்கள் கேட்ட ஆவணங்கள் மற்றும் பிராசசிங் கட்டணம் 5 ஆயிரம் ஆகியவற்றை அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கில் செலுத்தினார். இதனையடுத்து, சுதாகரின் விசா, ஒர்க் பர்மிட்  அனுப்பி வைக்கின்றோம், என அடிக்கடி பேசி, பணத்தை கேட்டுள்ளனர். வெளிநாடுக்கு சென்று சம்பாதிக்க வேண்டுமே என்ற ஆவலுடன், அவர்கள் கேட்ட பணத்தை அனுப்பி உள்ளார்.   அதன் படி இதுவரை  சுதாகர் 3.37 லட்சம் வரை பணத்தை  அனுப்பினர்.




ஆனால் பல நாட்கள் ஆகியும், வெளிநாட்டுக்கு செல்வதற்கான,  விசாவோ, ஒர்க் பர்மிட்டோ அனுப்பி வைக்கப்படவில்லை, வெளியில் வாங்கிய பணத்திற்கும், நகைகளை அடமானம் வைத்தும் பல்வேறு வகைகளில் பணம் வாங்கி கொடுத்துளளதால், அவர்களிடம் இருந்து எந்த விதமான தகவலும் வரவில்லை. போனில் பேசுவதையும் நிறுத்தி விட்டார்கள்.  அவர்களது செல்போனில் எண்ணில் தொடர்பு கொண்டாலும், எந்தவிதமான பதிலும் இல்லாததால், சுதாகர் அதிர்ச்சியடைந்தார். இதனால், சந்தேகமடைந்த சுதாகர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ்சில் விசாரித்துள்ளார்.  அப்போது, அந்நிறுவனத்தார், இது பொய்யான விளம்பரம், இது போன்று பல்வேறு விளம்பரங்கள், பணத்தை பறிப்பதற்காக பேஸ்புக்கில் பதிவிடுகிறார்கள், ஏராளமான வாலிபர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்தனர். பின்னர், சுதாகர், பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைந்ததை தெரிய வந்தது.




கொரோனா தொற்றால் வேலை வாய்ப்பில்லாமல் அவதிப்பட்டு வருவதால், வெளிநாடு சென்று சம்பாத்தித்து, கஷ்டத்தில் இருந்து மீண்டு விடலாம் என்று நோக்கத்தில் இருந்த போது, பேஸ்புக்கில் போலி விளம்பரத்தை நம்பி ஏமாற்றமடைந்ததால், சுதாகர், மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். இது குறித்து சுதாகர், தஞ்சாவூர், சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.