தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காக கிருஷ்ணகிரிக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.


தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பொங்கிப் பெருகி வந்த காவிரி ஆற்றில் தஞ்சாவூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டி தண்ணீரை சிக்கனமாகவும், சீராகவும் பயன்படுத்தி விவசாயத்தை கையாள வேண்டும் என கற்றுக்கொடுத்துள்ளார் மன்னன் கரிகாலச்சோழன்.


சோழநாடு சோறுடைத்து என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டங்களில் முப்போகமும் நெல் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். குறுவை, சம்பா, தாளடி மற்றும் கோடை நெல் சாகுபடி என விவசாயிகள் நெற்களஞ்சியமாம் தஞ்சாவூரின் பெருமையை உயர்த்தி வருகின்றனர். முப்போகமும் நெல் விளைச்சல் பெறுவதால்தான் தஞ்சாவூர் நெற்களஞ்சியம் என போற்றப்படுகிறது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் தானியங்களை சேமித்து வைக்கும் குதிர்கள், பத்தாயங்கள் எனப்படும் தானிய சேமிப்பு கலன்கள் இருந்துள்ளது. இன்றும் இருக்கிறது. இத்தகைய பெருமையை கொண்டு விளங்குகிறது தஞ்சாவூர். மாடு கட்டி போரடித்தால் மாளாது என்பதால், யானை கட்டி போரடித்த நாடு தான் சோழநாடு. சோழநாடு சோறுடைத்து என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டங்களில் முப்போகமும் நெல் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். 


அந்த காலத்திலேயே கோயில்கள் மட்டுமல்லாமல், பஞ்சம் வரும் காலங்களில் பயன்படுத்துவதற்காக தானியங்களை, விதைகளை சேமித்து வைக்கும் களஞ்சியங்கள் நம் முன்னோர்களின் தொழில்நுட்ப அறிவை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.




தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு  லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.


இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொது வினியோகத் திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.


இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். இந்த நிலையில் பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் 2500 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் தஞ்சாவூரிலிருந்து  2000 டன் நெல் மூட்டைகள் அரவைக்காக கிருஷ்ணகிரிக்கு 42 வேகன்களில் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.


தஞ்சாவூரின் வடபகுதியான திருவையாறு பகுதியில் ஐந்து முக்கிய ஆறுகளான காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு ஆகிய ஆறுகள் பாய்ந்து வளப்படுத்தியதால், ஆண்டுமுழுவதும் விவசாயம் தழைத்தோங்கியுள்ளது. தஞ்சாவூர் பகுதியில் விளையும் நெல்லானது, தற்போதும் தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கிறது என்றால், அதற்கு தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளின் உழைப்பும், அதற்குத் திட்டமிட்ட மன்னர்களின் நீர் மேலாண்மையும் தான் காரணம் என்றால் அது மிகையாகாது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.