திருவாரூர் அடுத்த புலிவலம் தெற்கு வீதி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். செல்வகுமார் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் கேட்டரிங் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் தமிழ்ச்செல்வி தனது இரண்டாவது மகன் மற்றும் செல்வகுமாரின் தாய் தந்தை ஆகியோரோடு வசித்து வருகிறார். செல்வகுமாரின் தாயும், தந்தையும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் உறவினர் வீட்டு திருமண நிகழ்வுக்காக வெளியூர் சென்றுவிட்ட நிலையில் நேற்றைய தினம் தமிழ்ச்செல்வியின் தந்தை உடல்நலக்குறைவால் நாகப்பட்டினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து தனது இரண்டாவது மகனுடன் நேற்று தமிழ்ச்செல்வி நாகப்பட்டினம் சென்றுள்ளார்.
இன்று காலை தமிழ்ச்செல்வி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 சவரன் தங்க நகைகள், ரூபாய் 25 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போய் இருப்பது தெரியவந்தது. உடனடியாக திருவாரூர் தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல அதே புலிவலம் பகுதியில் நேற்று மதியம் மூதாட்டி ஒருவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பரபரப்பு அடங்குவதற்குள் இன்று அதே பகுதியில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போய் இருப்பது மேலும் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் திருவாரூர் நகர்ப்பகுதி முழுவதும் நடைபெற்றுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். காவல்துறையினர் கொள்ளையர்களை பிடிப்பதில் சுணக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் நகைகளை பறிகொடுத்தவர்கள் கூறும் அளவைவிட காவல்துறையினர் மிகக் குறைந்த அளவே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். காவல்துறை சார்பில் பல்வேறு ரோந்து பணிகள் நடைபெற்று வந்தாலும், பெரும்பாலும் திருட்டு சம்பவங்கள் இரவு நேரங்களிலேயே நடைபெறுவதால் காவல்துறையினர் அதிக அளவில் நகர்ப் பகுதி மற்றும் நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் அதிக அளவு ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருவாரூர் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.