தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை இரண்டு காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் முன்விரோதம், பழிக்கு பழி வாங்குதல், குடும்ப தகராறு உள்ளிட்ட பிரச்சனைகளின் காரணமாக இதுவரை 15க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. குறிப்பாக சமீபத்தில் நீடாமங்கலம் கடைவீதியில் பட்டப்பகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தமிழார்வன் 8 பேர் கொண்ட கும்பலால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அதேபோல காட்டூரில் குமரேசன் என்ற ரவுடி படுகொலை செய்யப்பட்டார். கடந்த ஜூலை மாதம் திருத்துறைப்பூண்டி அருகே ஆரியலூரில் வளரும் தமிழகம் கட்சி நிர்வாகி ரஜினி பாண்டியன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். கடந்த ஜூன் 19 ஆம் தேதி திருவாரூர் அருகே கூடூரில்  ஏடிஎம் மையத்தை கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள் 4 பேர் ஏடிஎம் மையக் கட்டிடத்தின் உரிமையாளர் தமிழரசன் என்பவரை கொலை செய்தனர்.



 

கடந்த மே 5 ஆம் தேதி கிடாரம் கொண்டானை சேர்ந்த ஜெயபாரதியை வெளிநாட்டில் வசிக்கும் அவரது கணவர் திட்டமிட்டபடி கூலிப்படையை ஏவி  சரக்கு வாகனத்தை மோதவிட்டு கொலை செய்துள்ளார். அதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் மன்னார்குடியில் வாலிபர்கள் பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட மோதல் காரணமாக சக நண்பரை கொலை செய்துள்ளனர். இதுபோல கடந்த 5 மாதத்தில் பகை காரணமாகவும், குடும்பத்தில் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சினைகள் காரணமாகவும் 15க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் கடந்த ஆகஸ்ட்  1 ஆம் தேதி, திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் கிராமத்தில் மகளின் காதலனை வீடு தேடிச் சென்று பெற்றோர்களே அரிவாளால் வெட்டியுள்ளனர். அதேபோல,  திருவாரூர் நகைக்கடை ஒன்றில் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடியை தூவி விட்டு ஐந்து பவுன் தங்கச்சங்கிலியை கணவன் மனைவி இருவரும் பறித்துச் சென்றனர். கடந்த மாதம் மன்னார்குடியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அரிவாளால் வெட்டிவிட்டு தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதேபோன்று திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் எனவும் மாவட்ட காவல்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

திருவாரூரில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் முன்பகை காரணமாக கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும் குற்ற சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களில் 30 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல் துறையினர் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.