தஞ்சாவூர்: தஞ்சையில் மினி லாரியில் 5 டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்த டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

Continues below advertisement

தேசிய அளவில் தமிழ்நாட்டில் தான் பொது வினியோகத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக சான்று அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்க நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் முறையான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் வினியோகத்தை கண்காணிக்கவும் பலதுறை அலுவலர்களை நியமித்துள்ளது.

ரேஷன் கடைகளில் வினியோகத்தை கண்காணிக்க வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தனியாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. தலைமையில் மாநில அளவில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதிலும் தற்போது இம் மாதம் முதல் உணவு பொருள் கடத்தல் பிரிவுக்கு என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுத்து வருகின்றனர்.

Continues below advertisement

இந்நிலையில் தஞ்சை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தஞ்சை ஆர்.எம்.எஸ். காலனி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது அந்த வழியாக வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த மினி லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசியை தஞ்சை டவுன், ஆர்.எம்.எஸ்.காலனி, நாஞ்சிக்கோடடை உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு வாங்கி அதனை இட்லி மாவு அரைப்பதற்காக அரவை மில்லுக்கும், மீன் பண்ணைகளுக்கும் கொண்டு செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து மினி லாரியில் இருந்த 50 கிலோ எடை கொண்ட 102 மூட்டைகளில் இருந்த 5 ஆயிரத்து 100 கிலோ அரிசி மற்றும் மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக அரிசியை பொதுமக்களிடம் இருந்து வாங்குபவரான தஞ்சை கீழவாசல் கொள்ளுபேட்டை தெருவை சேர்ந்த மணிவண்ணன் (37), மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் தஞ்சை தொல்காப்பியர் நகர் 5-வது தெருவை சேர்ந்த வாவர் (வயது 26), லோடுமேன் நாஞ்சிக்கோட்டை ஜெயபூங்காவனம் நகரை சேர்ந்த ஜலீல்ரகுமான் (34) ஆகியோரை கைது செய்தனர்.

ரேஷன் அரிசியை வாங்கி வியாபாரம் செய்து வந்தவர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.