சுவாமி விவேகானந்தர் தஞ்சைக்கு வந்து சென்றதன் 125-வது ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு சிறப்பு கல்வெட்டு திறக்கப்பட்டது. சுவாமி விவேகானந்தா் சிகாகோ நகரில் ஆற்றிய எழுச்சியுரை, உலக வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் வழியாக 1897-ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி பாம்பனுக்கு, சுவாமி விவேகானந்தா் வந்து சோ்ந்தார். பாம்பன், ராமேசுவரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் சொற்பொழிவு நிகழ்த்திய அவா், ரயில் மூலமாகத் திருச்சி, தஞ்சாவூா் வழியாகக் கும்பகோணத்துக்கு பிப்ரவரி 3-ஆம் தேதி வந்தடைந்தார். திருச்சி, தஞ்சாவூா் ரயில் நிலையங்களில் அவருக்கு ஏராளமான பக்தா்கள் திரண்டு வரவேற்பு அளித்தனா். கும்பகோணத்தில் பிப்ரவரி 3-ஆம் தேதியிலிருந்து 5 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் தங்கியிருந்தார். அப்போது, 3 பள்ளிகளுக்குச் சென்று மாணவா்களிடையே உரையாற்றினார். ரயில் மூலம் புறப்பட்ட அவர் தஞ்சாவூருக்கு பிப்ரவரி 3 ஆம் தேதி அதிகாலை வந்தார்.
சுவாமி விவேகானந்தர், தஞ்சை ரயில் நிலையத்தில் இறங்காமல், கும்பகோணத்திற்கு செல்கின்றார், என்று தெரிந்தவுடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள், ரயிலை நிறுத்தினர். பின்னர் அவருக்கு தஞ்சாவூர் ரயில் நிலையத்திலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி விவேகானந்தரை வரவேற்றனர். பின்னர் பக்தர்களுக்கு ஆசி வழங்கி உரையாற்றினார். அதன்பிறகு அவர் கும்பகோணத்துக்கு ரயிலில் சென்று மூன்று நாட்கள் தங்கி பல இடங்களில் சொற்பொழிவாற்றினார். சுவாமி விவேகானந்தர் தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு வந்து 125 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சிறப்பு நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடுகளை செய்தது.
அதன்படி தஞ்சை ரயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தரின் 125 ஆண்டு விஜயம் குறித்த கல்வெட்டும், சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைக்கப்பட்டது. சுவாமி விவேகானந்தர், இந்தியா முழுவதும் செல்வதற்காக பெரும்பாலும் ரயிலில் சென்று வந்தார். இதனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, ரயில்வே நிலையங்களில் விவேகானந்தரின், கல்வெட்டுகளை வைக்க அனுமதியளித்தது. இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் முதலாவதாக வைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தரின் கல்வெட்டுக்களில் தஞ்சை ரயில் நிலையமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த கல்வெட்டை திருச்சி ரயில்வே கோட்டம் உதவி வணிக மேலாளர் சந்திரசேகரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் தலைமை வகித்தார். ராமகிருஷ்ண மடம் மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜிதமானசந்தா மகராஜ், தஞ்சாவூர் ரயில் நிலைய மேலாளர் சம்பத்குமார், திருச்சி தலைமையிடத்து வணிக ஆய்வாளர் கல்யாணசுந்தரம், தஞ்சாவூர் வணிகப் பிரிவு ஆய்வாளர் தங்கமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து புஷ்பாஞ்சலியுடன் ஆரத்தி நடந்தது. ஓய்வுபெற்ற பேராசிரியை இந்திரா தொடக்க உரையாற்றினார். ஜெயக்குமார் வீரமொழி வாசித்தார். தொடர்ந்து அன்னை சாரதாதேவி, ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தரின் உருவ படங்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க துணைத் தலைவர் ஏ.கிரி, பாபநாசம் ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் டி.சரவணன், கும்பகோணம் அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் வி.சத்தியநாராயணன் மற்றும் தஞ்சை ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள், ரயில் பயணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.