தஞ்சை மாவட்டத்தில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 109 கடைகளுக்கு சீல் வைத்து மாவட்ட கலெக்டர் தினேஷ் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.



இந்தியாவில் புகையிலையை மெல்லுவது, புகையிலை பொருட்கள் கலந்த பான், பாக்கு, மூக்குப்பொடி, பீடி, சிகரெட் போன்றவற்றை நுகர்வதை காண முடிகிறது. புகையிலை பொருட்களால் ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 10 லட்சம் பேர் இந்தியர்கள். புகையிலையினால் ஏற்படும் வாய்புற்றுநோய், லட்சத்தில் 10 பேரை பாதிக்கிறது. புகையிலையில் இருக்கும் நிக்கோட்டின் எனும் அமிலம் ஒருவித போதையை ஏற்படுத்துகிறது. இந்த நிக்கோட்டின் ரத்தக்குழாய் வழியாக மூளைக்குச் செல்லும்போது ஒருவிதப் புத்துணர்வைத் தருகிறது. தொடர்ந்து புகைபிடிப்பவர்கள் நிக்கோட்டினுக்கு அடிமையாகின்றனர்.





சிகரெட்டை விட மெல்லும் வகை புகையிலைகளில் நிக்கோட்டினின் அளவு அதிகம் உள்ளது. முந்தைய காலத்தில் புத்திக்கூர்மைக்காகப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் நிக்கோட்டின் தற்போது தற்கொலை, மன அழுத்தம்‌, உடல்நலப் பாதிப்பு ஆகியவற்றுக்குக் காரணமாக உள்ளது. இளம் சமுதாயத்தினர் புகையிலை பொருட்களால் தங்களின் வாழ்வை அழித்துக் கொள்கின்றனர். தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட பொருட்களை இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். குட்கா பொருட்கள் குறைந்த விலையில் விற்பதும் இளைஞர்கள் அதை அதிகம் பயன்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்நிலையில் குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கவும், அந்த பொருட்களால் உடலுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்ததாலும், புகையிலை பொருட்களுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு தடை விதித்து வருகிறது.

அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட கலெக்டர் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

இதன்படி மளிகை கடை, பெட்டிக்கடைகளில் சோதனை ஏற்கனவே நடத்தப்பட்டு 109 கடைகளில் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கடை உரிமையாளர்கள் விளக்கம் அளிக்காததாலும், அவர்கள் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததாலும் கடைகளை பூட்டி சீல் வைக்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.




அதன் படி தஞ்சை வடக்கு வீதியில் 2 கடைகளுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவுளி பிரியா ஆகியோர் மேற்பார்வையில் தாசில்தார் மணிகண்டன், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சித்ரா மற்றும் அதிகாரிகள் சீல் வைத்தனர். அதைத்தொடர்ந்து தஞ்சை மாநகரில் 9 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் 109 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.


மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் இந்த அதிரடி நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புகையிலை பொருட்களால் இளம் சமுதாயத்தினர் சீரழிந்து வருவதை தடுக்கும் வகையில் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கலெக்டருக்கு பாராட்டுக்களும், நன்றியும் தெரிவித்துள்ளனர் பெற்றோர்கள்.