தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற காசவளநாடு கோவிலூர் ஜெம்புகேஸ்வரர் கோயிலில் 1,008 குத்துவிளக்கு பூஜை சிறப்பாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Continues below advertisement

காசவளநாடு கோவிலூர் ஜம்புகேஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயிலாகும். தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை சாலையில் மேல உளூரிலிருந்து மேற்கே 7 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தெற்கு திருச்சுற்றில் காணப்படுகின்ற தல மரமான பலா மரத்தின் அருகே உள்ள தூணில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. அதில் இறைவன் பெயர் திருவானைக்கா உடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

தஞ்சாவூர் அருகே காசவளநாடு கோவிலூரில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயிலில் 1,008 குத்துவிளக்கு பூஜை  சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூர் அருகே 18 கிராமங்களைக் கொண்ட காசவளநாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவிலூரில், அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயில் உள்ளது.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர பெருவிழா மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள், மாதந்தோறும் திருவாசகம் முற்றோதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. பழமையான இக்கோயிலில் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 7 -ம் தேதி கும்பாபிஷேகம் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து கோயிலில் தினமும் பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து இந்த கோயிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டு கடந்த ஜூன் 10-ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள், காசவளநாட்டார்கள் இணைந்து 1,008 குத்துவிளக்கு பூஜை நடத்திட முடிவு செய்தனர்.

அதன்படி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து மாலை கோயில் வளாகத்தில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.