வயது மூப்பின் காரணமாக மரணமடைந்த ராஜராஜன் மோப்பநாய், காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது
தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருபவர்கள் காவல்துறையினர். அவர்களுக்கு உற்ற துணையாக காவல்துறையில் செயல்படுவது மோப்ப நாய்கள். உதாரணமாக ஒரு இடத்தில் திருட்டு நடந்தாலும் அல்லது கொலை, கொள்ளை, போன்ற சம்பவங்கள் நடந்தால் அந்த இடத்தில் காவல்துறையினர் சோதனை நடத்திய பின்னர், அந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டார்கள் என்பதை கண்டறிய காவல்துறையினரால் வளர்க்கப்படும் மோப்ப நாய்கள் சம்பவ இடத்திற்கு வந்து மோப்பம் பிடித்து குற்றவாளிகள் எந்த திசையில் சென்றார்கள் என்பதை காவல்துறையினருக்கு அடையாளம் காட்டிக் கொடுக்கும், முக்கிய பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடும். குறிப்பாக தமிழ்நாட்டில் பல முக்கிய குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை மோப்ப நாய்கள் கண்டறிந்து கொடுத்துள்ளது இதற்கு காவல்துறையின் சன்மானமும் பாராட்டும் பலர் மோப்ப நாய்கள் பெற்றுள்ளன என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் ராஜராஜன், சச்சின் ,சீசர், டப்சி உள்ளிட்ட மோப்ப நாய்கள் துப்பறியும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக துப்பறியும் பணியில் ஈடுபட்ட ராஜராஜன் என்ற மோப்பநாய் நேற்று மாலை வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தது. இந்த ராஜராஜன் மோப்பநாய் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் துப்பறியும் பணியை சிறப்பாக செய்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டையே அனைவராலும் திரும்பிப் பார்க்கப்பட்ட கொள்ளை சம்பவங்களில் முக்கியமான திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில், குற்றவாளிகளை பிடிப்பதற்கு ராஜராஜன் மோப்பநாய் திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரபல ரவுடி கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு ராஜராஜன் மோப்பநாய் மிகவும் உதவிகரமாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்காக பல்வேறு பரிசுகளை ராஜராஜன் மோப்பநாய் பெற்றுள்ளது என அதனுடன் பயணித்த சக காவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக நேற்று மாலை மரணமடைந்த ராஜராஜனின் உடல் துப்பறிவு பிரிவு அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு, காவல்துறையினர் மாலையணிவித்து, 21 குண்டுகள் முழங்க போலீஸார் இறுதி மரியாதை செலுத்திய பின் நல்லடக்கம் செய்யப்பட்டது. துப்பறியும் பிரிவு துணை கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் காவல்துறையினர் மரியாதை செய்து இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது. மோப்ப நாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான காவல்துறையினர் பங்கேற்று ராஜராஜனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.