கொரோனா காரணமாக கடந்தாண்டு நாடு முழுவதும் ரயில், பேருந்து, விமானம் உள்பட அனைத்துவித பொதுப் போக்குவரத்தும் முடக்கப்பட்டது. பின்னர், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு மீண்டும் பொதுப்போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது.
இருப்பினும், தமிழகத்தில் முழு அளவில் ரயில் சேவை மீண்டும் இயக்கப்படவில்லை. இந்த நிலையில், திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் அனைத்து ரயில்கள், புறநகர் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கடந்த வாரம் முதல் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனிமனித விலகல் உள்ளிட்ட விதிகளை பின்பற்றினாலும், புறநகர் ரயில்களில் அவற்றை பின்பற்ற முடியாது.கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் முடியாது. இதனால், ரயில்களை முழுமையாக இயக்க உத்தரவிட முடியாது. தற்போதைய நிலையை கருத்தில் கொண்டே நீதிமன்றங்களை திறக்கும் முடிவை திரும்ப பெற்றுள்ளோம்.
நிபுணர்களை கலந்தாலோசித்து ரயில்வே நிர்வாகம் இதுசம்பந்தமாக முடிவெடுத்துக் கொள்ளலாம். தடுப்பூசி போடும் பணிகள் முழுமையடைந்த பிறகோ அல்லது தொற்று பரவல் குறைந்தாலோ மனுதாரர் இதே கோரிக்கையை எழுப்பலாம்..
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.