தமிழக தேர்தல் பணி; 235 கூடுதல் துணை ராணுவ கம்பெனி வருகை
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் | 24 Mar 2021 11:06 AM (IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 235 துணை ராணுவ கம்பெனி தமிழகம் வரவிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
army_election
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் செலவுகள், பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவது அதிகரித்திருப்பதால் சிறப்பு செலவின பார்வையாளர்களை இந்த தேர்தலுக்காக நியமித்துள்ளது. தமிழக தேர்தல் பணிக்காக 330 கம்பெனி துணை ராணுவத்தை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வேண்டுகோள் வைத்திருந்தார்.
ஏற்கனவே 65 கம்பெனி துணை ராணுவத்தினர் அனுப்பப்பட்ட நிலையில், அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில் தமிழகத்திற்கு கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவத்தினரை வழங்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு முன்பாக அவர்கள் அனைவரும் தமிழகம் வந்து தங்கள் பணியை தொடரவிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரகு சாகு தெரிவித்துள்ளார்.