ஐ.நா.வில் இலங்கையில் நடைபெற்ற போரக்குற்றங்கள் தொடர்பாக இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதில் இந்தியா வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவியுள்ளது இந்திய அரசு. ஈழத் தமிழர்களுக்கு விரோதமான பா.ஜ.க. அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
இன்றைய தினம் நடந்த வாக்கெடுப்பில் இந்திய அரசின் பிரதிநிதி பங்கெடுக்காமல் வெளிநடப்பு செய்துள்ளார். இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம்.
தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால் வெளிநடப்பு செய்து நடித்துள்ளார்கள். இல்லாவிட்டால் இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பார்கள். வெளிநடப்பு செய்ததற்காக இந்தியாவுக்கு இலங்கை அரசு நன்றி சொல்லி இருக்கிறது. ஈழத் தமிழர்க்கு மோடி இழைத்திருக்கும் பச்சைத் துரோகத்துக்குக் கிடைத்த பாராட்டு நன்றிப் பட்டயம்தான் இது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.