நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் பங்குதாரராக இருக்கும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் 2014-ஆம் ஆண்டு விக்ரம் பிரபு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டு இருந்தது.இதற்காக, ஒன்றரை கோடி ரூபாயை ரேடியன்ஸ் நிறுவனத்திடம் கடனாக வாங்கி இருந்தனர். 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறினர். திருப்பி தந்துவிட்டு படத்தை வெளியிடுவோம் என்றும் தெரிவித்தனர். ஆனால் பணத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் திருப்பித் தரவில்லை.

Continues below advertisement





அதே நேரம், இந்த பணத்தை பயன்படுத்தி, பாம்பு சட்டை என்ற பெயரில் வேறு ஒரு படம் தயாரித்தது. ரேடியன்ஸ் நிறுவனத்திற்கு மேஜிக் பிரேம்ஸ் வழங்கிய செக் பவுன்ஸ் ஆகியது. இதையடுத்து நீதிமன்றத்தில் ரேடியன்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று கூட உத்தரவு வழங்கியது நீதிமன்றம்.
மொத்தம் 7 வழக்குகளில் சரத்குமார் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டார். 2 வழக்குகளில் ராதிகா மற்றும் ஸ்டீபன் ஆகியோரும் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டனர். தாங்கள் மோசடி செய்ய நினைக்கவில்லை. வட்டி அதிகமாக கேட்டதால் பணத்தை உடனே திரும்ப செலுத்த முடியவில்லை என்று வாதிடப்பட்டது. ஆனால் செக் மோசடி செய்யப்பட்டுள்ளது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.




இந்த நிலையில், சென்னையில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதன்படி 7 வழக்குகளில் எதிர் மனுதாரராக இருக்கும் சரத்குமாருக்கு தலா ஒரு வருடம், ராதிகாவுக்கும், ஸ்டீபனுக்கும் 2 வழக்குகளில் தலா ஒரு வருடம் சிறை என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 3 வருடத்திற்கு உட்பட்ட சிறை தண்டனை என்பதால், விதிமுறைகளின்படி, மேல்முறையீடு செய்யும்வரை, தங்களது, தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மூன்று பேர் தரப்பிலும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது இன்று மாலைக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. ஒருவேளை தண்டனை நிறுத்தப்பட்டால், இவர்கள் சிறைக்கு செல்வது தடுக்கப்படும்.