உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 13-ஆம் தேதி டெல்லி - டேராடூன் வழி ரயிலில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தீப்பிடித்த பெட்டி முழுவதும் எரிந்து நாசமாகியது. தீயணைப்பு வீரர்களும் போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்திற்கு மின் கசிவுதான் காரணம் என்றும் தெரியவந்தது.
இதுதவிர, டெல்லி-புவனேஸ்வர், அலஹாபாத் ரயில்நிலையத்தில் தூரந்தோ ரயில் ஆகியவற்றில் ஏற்பட்ட தீ விபத்திற்கும் மின்கசிவே காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து, தீ விபத்து ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேரங்களில் ரயில்களில் செல்போன் சார்ஜ், லேப்டாப் சார்ஜ் செய்வதற்கான பிளக் பாயிண்டுகளுக்கான மின்சாரத்தைத் துண்டிப்பதாக தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, விளக்கம் அளித்த தெற்கு ரயில்வே மக்கள்தொடர்பு தலைமை அலுவலர் சுமித்தாக்கூர், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு ரயில்களில் சார்ஜ்செய்யும் பிளக் பாயிண்டுகளுக்கான மின் இணைப்பு இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை துண்டிக்கப்படுகிறது என்று கூறினார். ஏற்கனவே மேற்கு ரயில்வே, கடந்த 16-ஆம் தேதி முதல் இரவு நேரங்களில் சார்ஜ் செய்வதற்கான பிளக் பாயிண்டுகளுக்கான மின் இணைப்பை துண்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரயில்களில் ஏற்கனவே புகைபிடித்தல், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு சென்றாலும் அபராதம் விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.