சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பரப்புரையின்போது திமுக எம்பி ஆ. ராசா முதல்வர் பழனிசாமியைக் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆ.ராசாவுக்கு எதிராக அதிமுகவினர் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, தொடரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதத்தில் ஆ.ராசா கடந்த மார்ச் 29ம் தேதி தனது வருத்தத்தை வெளிப்படுத்தினர். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “எனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. எனது பேச்சால் முதல்வர் பழனிசாமி கலங்கினார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். தவறாக புரிந்துகொள்ளப்பட்ட பேச்சுக்காக எனது அடிமனதின் ஆழத்தில் இருந்து வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று கூறினார்.
இந்நிலையில் ராசா மேல் அளிக்கப்பட்ட புகார் குறித்து, மாவட்டத் தேர்தல் அதிகாரி மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் அறிக்கை பெறப்பட்டன. பெறப்பட்ட அறிக்கைகள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் இன்று மாலைக்குள் (மார்ச் 31) தேர்தல் ஆணையத்திற்கு இந்த விவகாரம் குறித்து ராசா விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.