முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் விமரிசையாக நடைபெறக்கூடிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரத் திருவிழா. கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாள் திருவிழாவாக பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்று வருகிறது. 


திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மலையடிவாரத்தில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் முருகன்- வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரி வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 




தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால், பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.