தமிழகத் தேர்தல் களத்தில் பிரச்சாரம் அனல் பறந்துவருகிறது. ஆனால், பல கட்சிகளின் வேட்பாளர்கள், வேட்பாளர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடும் கட்சி பிரமுகர்கள் ஆகியோரின் பேச்சில் பெண்களைக் குறித்தும், எதிரணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் அருவருப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தும் வகையில் பல இடங்களில் பேசப்படுவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


`பெண்களின் இடுப்பு பேரலாகிவிட்டது’ என்று தொண்டாமுத்தூர் பிரச்சாரத்தில் பேசியிருந்தார் தி.மு.கவின் கொள்கைப் பரப்புச்செயலாளர் திண்டுக்கல் ஐ. லியோனி. `பெண்களுக்கு இலவச நாப்கின் கொடுக்குறேன்னு நீ தேர்தல் அறிக்கையில சொல்லலாமா. உன் வீட்டு பொம்பளைக்கு கொடுப்பியா?’ என்றார் பேராவூரணி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் க. திலீபன். அரசியல் ரீதியாக முன்னேறுவதில், கள்ள குழந்தைதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றார் ஆ.ராசா. இப்படியான அடுக்கடுக்கான கண்ணியக்குறைவான பேச்சுகளால் நிறைந்திருக்கிறது பிரச்சாரக் களம்.


இந்நிலையில், தற்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்புடைய கழக உறுப்பினர்களுக்கு, மக்களிடையே பரப்புரை செய்யும்போது நமது கழக மரபையும் மாண்பையும் மனதில் வைத்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். வெற்றிக்கு முன், வெற்றிக்கான பாதையும் முக்கியமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.


பரப்புரையில் ஈடுபடும் போது கழகத்தினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அப்படிப்பட்ட சொற்கள் உதிர்த்திடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும் என்பதையும், அத்தகைய பேச்சுகளைக் கழகத் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு ஆகிய மூன்றில், பேச்சாளர்களின் முதன்மை அம்சமாக இருக்கவேண்டியது கண்ணியமாகும்! அதை நினைவில் கொண்டு பேச வேண்டும்.


தி.மு.க. கூட்டணியின் வெற்றி உறுதியாகவும் வலிமையாகவும் மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், கழகத்தினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி - ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள்.


அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில், கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கழகத்தினரைக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.