தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.


தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவிற்கான, வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றிலும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இந்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென 2 மணிளவில் 5 கண்டெய்னர் லாரிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்தன. இந்த கண்டெய்னர் லாரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்தன. இதைக்கண்ட தி.மு.க.வினர் சந்தேகம் அடைந்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.




அப்போது அதற்கு பதிலளித்த தேர்தல் அலுவலர்கள், இந்த கண்டெய்னர் லாரிகளில் இருப்பவை பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்காக கூடுதலாக கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்படாத வாக்கு இயந்திரங்கள் என்று விளக்கம் அளித்தனர். ஆனாலும், திருப்தியடையாத தி.மு.க.வினர் கண்டெய்னர் லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தி விளக்கம் அளித்தார். மேலும், கண்டெய்னர் லாரிகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் குடோனில் வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார். பின்னர், தி.மு.க.வினர் கலைந்து சென்றனர்.