ஜூலை முதல் ஜனவரி வரை மழை மற்றும் பனியால் பச்சை பட்டு விரித்தாற் போல காட்சியளிக்கும் வனப்பகுதிகள் கோடை துவங்கியதும் கருகுவது இயற்கையில் ஒவ்வொரு ஆண்டும் நிகழும் வழக்கமான நிகழ்வு தான் என்றாலும், காட்டுத்தீ போன்றவற்றால் வனங்கள் அழியும் அவல நிலையும் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்து கொண்டே தான் உள்ளது. இம்முறை அதற்கான பிள்ளையார்சுழி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் துவங்கியுள்ளது.




மலைகளின் இளவரசியான  கொடைக்கானல்  வனச்சரகத்திற்கு   உட்பட்ட  மச்சூர் மலை  பகுதியில்  உள்ள  அடர்ந்த  வனப்பகுதியில்  பல  ஏக்கர்  பரப்பளவில்  கட்டு  கடங்காமல் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது.  
இதனால் அரிய  வகை மூலிகை மரங்களும் எரிந்து சாம்பலாகி வருகின்றன. மேலும் அரிய  வகை பறவை இனங்களும்,வன விலங்குகளும்  இடம்பெயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.




தற்போது  எரிந்து  வரும்  காட்டு  தீ  மலை  பகுதிகளின் மேல் பற்றி எரிந்து வருவதால் தீயணைப்பு துறையினர் சென்று தீயை அணைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது,காட்டு தீ அருகில் உள்ள வனப்பகுதிகளுக்கும்,குடியிருப்பு பகுதிகளுக்கும்  பரவாமல் இருப்பதற்கு  தீ  தடுப்பு  எல்லைகள் அமைக்கப்படும் பணியில் சுமார் 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.




மேலும் தொடர்ந்து காற்றின் வேகத்தில் தீ பரவி வருவதால் கொடைக்கானல் மச்சூர் மலை பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அடுத்த நாட்களில் இது போன்ற விபத்துக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் அதற்கு முன்பாகவே வனங்களை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.