சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் மதுபானக் கடைகளில் கூட்டம் கூடும் என்பதால், மதுபானக் கடைகள் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறிவிடக் கூடாது. எனவே, மதுபானக் கடைகளை மார்ச் 22 முதல் ஏப்ரல் 6 வரை மூடும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.




இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் ஏப்ரல் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகள் மதுபானக் கடைகளை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தப் பல்வேறு விவகாரங்கள் உள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையிலும், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையிலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகக் கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.