பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த குரல் வலுத்து வரும் நிலையில், மறுபுறம் அதற்கு மாறான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக பெண் குழந்தைகளை குறி வைத்து நடக்கும் கசப்பான சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி ஒன்று தான் திண்டுக்கல் மாவட்டம் ஆர்.கல்லுப்பட்டியில் அரங்கேறியுள்ளது. 




வடமதுரை அருகே உள்ள அந்த கிராமத்தில் 37 வயதான தங்கவேல் என்பவர், அதே ஊரை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயதான மாணவி ஒருவரை நீண்ட நாள் நோட்டமிட்டு வந்துள்ளார். ஒருநாள் தனிமையில் மாணவி வீட்டில் இருப்பதை அறிந்து அங்கு வந்த தங்கவேல், சில ஸ்நாக்ஸ்களை அவரிடம் தந்துள்ளார். அவரை நம்பி ஸ்நாக்ஸ்களை சிறுமி பெற்றுக் கொண்ட பின், அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற தங்கவேல், அவரிடம் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார்.




சிறுமியை வீட்டிற்கு அழைத்து செல்வதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த 65 வயதான பெருமாள் மற்றும் 70 வயதான குருமூர்த்தி ஆகியோர், அவர்களை பின் தொடர்ந்து சென்று பார்த்த போது, தங்கவேல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. தங்கவேலை மிரட்டி நடந்ததை தெரிந்து கொண்ட அந்த முதியவர்கள் இருவரும், தனித்தனியாக ஸ்நாக்ஸ் வாங்கி சென்று அதே சிறுமிக்கு கொடுத்து பாலியல் சில்மிஷம் செய்துள்ளனர். இதை வெளியே சொன்னால், கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டியுள்ளனர். சிறுமியும் உயிருக்கு பயந்து அவர்களை அழைத்த போதெல்லாம் சென்று வந்துள்ளார்.




இப்படியே 8 மாதங்கள் அவர்கள் சிறுமியை பாலியல் கொடுமை செய்துள்ளனர். ஒருநாள் சிறுமியை தங்கவேல் அழைத்துச் செல்வதை பார்த்த சிலர், அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர் விசாரித்த போது, நடந்தவற்றை கண்ணீர் சிந்த கூறி முடித்தார் சிறுமி. கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து முதியர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிறுமியை ஸ்நாக்ஸ் காட்டி மூவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.