பட்டாசுத் தயாரிப்புக்கு விருதுநகர் மாவட்டம் சிவகாசி உலகப்புகழ் பெற்றதாகும். இருப்பினும், இந்த பகுதியில் பட்டாசுத் தயாரிப்பின்போது வெடிவிபத்து ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டி அருகே உள்ள எம்.துரைசாமிபுரத்தில் பட்டாசு தயாரிப்பு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் சுமார் 20 பேர் வேலை செய்து வந்தனர். அப்போது, அந்த ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.


இந்த வெடிவிபத்து காரணமாக அந்த ஆலையில் வேலை செய்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


முதற்கட்ட விசாரணையில் வெடிமருந்துகள் இடையே ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், ஆலையின் உரிமையாளரை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.