தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைப் போலவே, புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக அம்மாநில பொறுப்பு ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்திற்கு பிறகு, நிருபர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை செளந்தரராஜன், “புதுச்சேரியில் தடுப்பூசி திருவிழாவில் முதல் நாளில் 7,271 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. புதுச்சேரியில் தேவையான அளவு தடுப்பூசி உள்ளது. தற்போது 1.10 லட்சம் பேருக்குத் தேவையான தடுப்பூசிகள் புதுச்சேரியில் உள்ளன.




புதுச்சேரியில் முகக்கவசம் அணியாவிட்டால் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு முகக்கவசம் வழங்கப்படவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஆதார் மட்டுமில்லாமல் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஏதேனும் ஒன்றைக் காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான படுக்கை வசதிகள் உள்ளன. எனினும், தேவைப்படின் தனியாக கோவிட் சென்டரை அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்கள் அச்சப்படாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றவேண்டும்.




நாட்பட்ட நோய்களில் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தரவும், தொடர்ந்து அவர்களுக்குத் தேவையான மருந்துகள் தரவும் நடவடிக்கையை சுகாதாரத்துறை எடுத்துள்ளது. அதேபோல், ஜிப்மரிலும் நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுவோருக்காக மருந்து மாத்திரைகள் சிகிச்சையை புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழக மக்களும் பெறுவதால் அது தொடர்பாகப் பேசவுள்ளோம்” என்று கூறினார்.