தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்ததை கருத்தில் கொண்டு, கடந்த ஜனவரி 19-ந் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளை திறக்கவும், பிப்ரவரி 8-ந் தேதி முதல் 9 மற்றும் 11-ந் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குனர் மேற்கொண்ட பரிசோதனையில் தஞ்சை மாவட்டத்தில் ஆங்காங்கே பள்ளிகளில் தொற்றுகள் கண்டறியப்பட்டது. சில மாவட்டங்களில் சிறியளவில் இந்த தொற்று பள்ளிகளில் கண்டறியப்பட்டு வருகிறது என்றும், ஒட்டுமொத்த நாள் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இந்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை குறைந்தளவில் காணப்பட்டாலும் தற்போது கொரோனா தொற்று பரவும் சூழ்நிலையில் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், உடனடியாக 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்புகள் வரையிலான வகுப்புகளை நடத்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய அவர் பரிந்துரை செய்துள்ளார்.
இதனால், வரும் 22-ந் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்துப்பள்ளிகளிலும் உள்ள 9, 10 மற்றும் 11ம் வகுப்புகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான விடுதிகளும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் 9, 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு இணையவழி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். மேலும், தமிழ்நாடு மாநில வாரியம் தவிர, மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அத்தேர்வு வாரியங்களால் அறிவிக்கப்பட்டுள்ளபடி நடைபெறும். இப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும், அவர்களுக்கான விடுதிகள் இயங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.