தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக்கொண்டார். ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில், அவருக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஸ்டாலினை தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11ம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். மே 11-ம் தேதி, எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சிக்கு வரும் உறுப்பினர்கள் தேர்தல் வெற்றி சான்றிதழை தவறாது எடுத்து வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அடுத்த நாள், மே 12-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பேரவைத் தலைவர் மற்றும் பேரவைத் துணைத் தலைவருக்கான தேர்தல்கள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பதினாறாவது சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தொடர் 2021-ஆம் ஆண்டு மே திங்கள் 11-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு, சென்னை-2, வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் தொடங்கவுள்ளது. அவ்வமயம், இந்திய அரசமைப்பின் கீழ், மாண்புமிகு உறுப்பினர்கள் உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். சட்டமன்றப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்தல் சான்றிதழை (Certificate of Election) உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்ள வரும்பொழுது உறுப்பினர்கள் தவறாமல் கொண்டுவர வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பேரவைத் தலைவர் மற்றும் பேரவைத் துணைத் தலைவருக்கான தேர்தல்கள் 2021-ஆம் ஆண்டு மே திங்கள் 12-ஆம் நாள், புதன்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு நடைபெறும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. நேற்று தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனைப்படி தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கபடுவதாக இன்று காலை அறிவிப்பு வெளியானது. 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் வழக்கம்போல் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு மற்றும் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் மே 9-ம் தேதி காலை 11.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் பிற முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.