விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த துரை பிரிதிவிராஜுக்கு 2008ம் ஆண்டு மறக்க முடியாத சம்பவம் நிகழ்ந்தது. அவருடைய தம்பி விபத்தில் சிக்கி ஆம்புலன்ஸுக்காக பரிதவித்து இறந்துபோகிறார். விருதுநகரில் இருந்து 20கிமீ தூரத்தில் இருக்கும் அருப்புக்கோட்டைக்கு ஆம்புலன்ஸ் வசதி கிடைக்கவில்லை. சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைத்திருந்தால் தம்பியை காப்பாற்றி இருக்கலாம் என்பதே துரை பிரத்விராஜ் மனதில் அழுத்தமாக பதிந்துள்ளது. அதன் தாக்கம் தான் இன்று இரண்டு ஆம்புலன்ஸ்களுடன் அறக்கட்டளை நடத்தி 
தனக்கு நேர்ந்த துன்பம் வேறு யாருக்கும் நடக்காமல் பார்த்துக்கொள்கிறார் துரை.




இது தொடர்பாக பெட்டர் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது . அதில் பேசிய துரை, நானும் என் தம்பியும் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தோம். அப்போது தம்பி விபத்தில் சிக்கினான். அப்போது அவனுக்கு உதவ யாருமே இல்லை. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. வேறு வாகனமும் இல்லை. இப்படி இருக்கும் நிலையில் நான் மற்றவர்களை நினைத்துப்பார்த்தேன். ஏழைகள் என்ன செய்வார்கள்? என் போன்ற நிலையை வேறு யாரும் உணரவேண்டாம் என நினைத்தேன் என்கிறார்.


இன்று ராஜேஷ் உதவும் கரங்கள் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் தொடங்கி இரண்டு ஆம்புலன்ஸுகளை இயக்கி வருகிறார். விருதுநகரைச் சுற்றி 40கிமீ சுற்றுவட்டாரத்தில் இவரது ஆம்புலன்ஸ்கள் பறக்கின்றன. 




2011ல் கல்லூரி முடித்த துரைக்கு, போதுமான சம்பளத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணி கிடைக்கிறது. அதற்கு பிறகே அவர் ஆம்புலன்ஸுக்கான திட்டத்தை கையில் எடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் பாதியை சேமித்து வைப்பேன். அதன் மூலம் வேன் வாங்க திட்டமிட்டேன். அதுபோக உதவிகோரி சிலரிடம் பணம் பெற்று, படுக்கை, போர்வைகள், உணவுகள், உடைகள் வாங்கினேன். வசதியில்லாத ஏழைகளுக்கு கொண்டு சேர்ப்பேன் என்கிறார். இப்படியாக 2018ல் தான் சேர்த்துவைத்த பணத்தில் மூலம் பழைய ஒம்னி வாகனத்தை வாங்கி, நண்பர்கள் , நலம் விரும்பிகளிடம் இருந்து பணம் பெற்று அதனை ஆம்புலன்ஸாக மாற்றி உள்ளார்.




அருப்புக்கோட்டையில் வசித்து வரும் விஜய் கணேஷ் என்பவர் தான் துரை ராஜுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். ஆம்புலன்ஸ் சேவை மட்டுமின்றி கிராமத்தில் உள்ள ஏழைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்குவது, உடை போன்ற அடிப்படை தேவைகளை வழங்குவதையும் கையில் எடுத்துள்ளனர். துரையின் சேவையை அறிந்த தொழிலதிபர்கள், மருத்துவர்கள், தன்னார்வலர்கள் பலரும் அவருக்கு உதவி செய்து வருகின்றனர். தற்போது 15 பேர் வரை உள்ள தொண்டு நிறுவனம் ஏழைகளுக்கு தேவையானதை செய்து வருகிறது. தொண்டு நிறுவனத்தில் மருத்துவர்களும் இணைந்து இலவசமாக மருத்துவ உதவியை செய்து வருகின்றனர். கொரோனா, ஊரடங்கு போன்ற கடினமான காலத்தில் தான் துரையின் தொண்டு நிறுவனம் தீவிரமாக இயங்குகிறது. அவரது ஆம்புலன்ஸ்கள் நிற்காமல் பறந்துகொண்டு இருக்கின்றன. நலம் விரும்பிகளின் உதவியோடு இந்த தொண்டு நிறுவனத்தின் சேவை இன்னும் அதிகரிக்கும் என்கிறார் துரை.


செய்தி மற்றும் புகைப்படம்: The better india.