தனியார் சேனலின் ரியாலிட்டி நிகழ்ச்சியில், குழந்தைகள் இருவர் பிரதமர் குறித்து பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தது எல்லை மீறலா அல்லது கருத்துச் சுதந்திரமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் குழந்தைகள் பங்குபெறும் ரியாலிட்டி ஷோவான 'ஜூனியர் சூப்பர் ஸ்டார்' என்னும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், சிறுவர்கள், சிறுமிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.
அண்மையில் வெளியான நிகழ்ச்சியின் குறிப்பிட்ட பகுதியில், இரண்டு சிறுவர்கள் மன்னர் -அமைச்சர் வேடமிட்டு நகைச்சுவை செய்தனர். அதில், கறுப்புப் பணத்தை மீட்டுப் பொதுமக்களுக்குப் பணம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வெளிநாட்டுப் பயணங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, விவசாயிகள் போராட்டம், தேர்தல் உத்திகள் மற்றும் தென்னாட்டு வருகை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பகடி செய்திருந்தனர். இதற்கு நிகழ்ச்சி நடுவர்களும் பார்வையாளர்களும் கோஷமிட்டு, கரவொலி எழுப்பினர்.
இந்த சூழலில், குழந்தைகளை முன்வைத்துச் சிலர் நாட்டுப் பிரதமரின் மாண்புக்கே களங்கம் கற்பிப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் இணைய வெளியில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
பகிரங்க மன்னிப்பு கோருக
பிரதமர் மோடி குறித்து நகைச்சுவை என்ற பெயரில் சிறுவர்களை வைத்து அவதூறு பரப்பிய ஜீ தமிழ் தொலைக்காட்சி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு, சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில், ''சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியின் குறிப்பிட்ட அந்த அத்தியாயத்தைத் திரும்பப் பெற வேண்டும். அத்துடன் பொது மன்னிப்பும் கோர வேண்டும்.
சேனல், நிகழ்ச்சி தயாரிப்பாளர், நிகழ்ச்சியின் நீதிபதிகள் என அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும். குழந்தைகளை அரசியல் கொள்கைகளைப் பரப்புவதற்காகப் பயன்படுத்தக்கூடாது. எங்களது மவுனம் நாங்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொள்வதாகக் கருதப்பட்டு விடக்கூடாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பாஜக தலைவர் அண்ணாமலை, ''மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடர்புகொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரதப் பிரதமரின் மாண்பைக் குறைப்பதுபோல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றிக் கேட்டறிந்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்! அவருக்கு என் நன்றிகள் ''என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எனினும் இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, ''குழந்தைகளுக்கு பயந்தால் ஏன் பொது வாழ்க்கைக்கு வர வேண்டும்? விமர்சனங்களைச் சந்திக்க முடியாதவர்கள் நாட்டு மக்களின் கோரிக்கையை எப்படிக் கேட்பார்கள்?'' என்று கேள்வி எழுப்பியுள்ளது.
நிகழ்ச்சியில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படாத நிலையில், பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டுவது ஏன் என்பது குறித்து 'ஏபிபி நாடு' செய்தி நிறுவனத்திடம் விரிவாகப் பேசினார் பாஜக இளைஞரணி முன்னாள் தேசியத் துணை தலைவரும் தமிழகத் தேர்தல் பொறுப்பாளருமான ஏ.பி.முருகானந்தம்.
அதிகரிக்கும் பிரதமரின் ஆளுமை
''எங்கு சென்றாலும் தமிழ், தமிழினம், தமிழகம், தமிழன் ஆகியவற்றுக்கு முதல் முக்கியத்துவம் கொடுப்பவர் பிரதமர் மோடி. நேற்று கூட, ஈழத்தில் 46 ஆயிரம் தமிழர்களுக்குப் புதிய வீடுகள் கட்டித் தந்திருக்கிறார். தமிழ்நாட்டில் பிரதமர் மோடியின் ஆளுமை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விஷம் விதைக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளின் மனதில் நச்சை விதைத்து, இந்த காமெடி அறுவடை செய்யப்பட்டிருக்கிறது.
சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்குத் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதன் அர்த்தம் 100 சதவீதம் தெரிந்திருக்காது. இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இருப்பினும் இதைச் செய்த அனைவரையும் கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைப்போம். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசியல் மேடையில் என்ன விமர்சனம் வேண்டுமானாலும் வையுங்கள். அதற்குக் குழந்தைகளைப் பயன்படுத்திக்கொள்வது ஏன்?
இந்த நிகழ்ச்சி தற்செயலாகவோ தவறுதலாகவோ நடைபெற்றிருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. எங்காவது ஓரிடத்தில் பேசியிருந்தால் அப்படி எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்தப் பேச்சு முழு நீளமாக, உள்நோக்கத்துடன் அமைந்திருக்கிறது. வசனங்கள் பலமுறை ஒத்திகை பார்க்கப்பட்டே, நிகழ்ச்சி எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட படக்குழுவுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கும். பார்ப்பதற்கு காமெடி போலத் தெரிந்தாலும் விஷத்தைக் கக்கும் பேச்சுகள் அவை'' என்கிறார் முருகானந்தம்.
கருத்துச் சுதந்திரம் ஆகாதா?
இதற்கு முன்பு பாஜக தலைவர் அண்ணாமலை, கிஷோர் கே ஸ்வாமி, மாரிதாஸ் ஆகியோரின் கைதின்போது, கருத்துச் சுதந்திரம் குறித்துப் பேசியிருந்தார். அந்த வகையில் இதுவும் கருத்துச் சுதந்திரம் ஆகாதா என்று கேட்டதற்குப் பதிலளித்தவர், ''குழந்தைகளைக் கொண்டு பிரதமரின் மாண்புகளைச் சிதைக்க வைப்பது எந்த வகையிலும் கருத்துச் சுதந்திரம் ஆகாது. குழந்தையைப் பேச வைப்பது யார் என்ற கேள்விக்கு பதில் இல்லையே.
இதை நாங்கள் எளிதில் விட்டுவிடப் போவதில்லை. எங்களின் 'ஸ்டைலில்' இதை வேரில் இருந்து எதிர்ப்போம். இதற்குப் பின்னணியில் இருப்பவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வரை விடமாட்டோம்'' என்று முருகானந்தம் தெரிவித்தார்.
சர்வாதிகாரப் போக்கு
நகைச்சுவை, நையாண்டிகள்தான் ஜனநாயகத்துக்கான அடையாளம். இதைக்கூட இவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சர்வாதிகாரர்களுக்குத்தான் இந்தப் போக்கு இருக்கும் என்று விமர்சிக்கிறார் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம். 'ஏபிபி நாடு' செய்தி நிறுவனத்திடம் அவர் மேலும் கூறும்போது, ''தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனிப்பட்ட முறையில், யாரின் பெயரையும் கூறாத நிலையிலேயே, சம்பந்தப்பட்டவர்களை மிரட்டும் போக்கில் பாஜகவினர் பேசி வருகிறார்கள்.
பிரதமருக்கு எதிராக அவர்கள் ஏதேனும் சதி செய்தார்களா? நகைச்சுவைகூட செய்யக்கூடாதா? அமெரிக்காவில் தினமும் தொலைக்காட்சிகளில் அரசியல் தலைவர்கள் மீது என்னென்ன விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன என்று பார்த்திருக்கிறார்களா, அது அவர்களுக்குத் தெரியுமா?
வல்லரசு என்று சொல்லிக்கொள்ளும் ஒரு நாட்டின் பிரதமருக்கும் அவரின் கட்சிக்காரர்களுக்கும் சகிப்புத்தன்மை இல்லையா? அடிப்படையில் அந்த நிகழ்ச்சி ஒரு நாடகம். அதை ஏற்றுக்கொண்டு ரசித்து, சிரித்துவிட்டுச் செல்ல வேண்டியதுதானே? ஏதோ உண்மை இருப்பதால்தான் அவர்களுக்கு உறுத்துகிறது'' என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
இதுகுறித்து விளக்கம் கேட்க ஜீ தமிழ் நிர்வாகத் தரப்பைப் பல முறை அழைத்தும், அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.
அமெரிக்கா போன்ற நாடுகளில் நேரடியாக அதிபரையே கிண்டல் செய்து நிகழ்ச்சிகள் நடத்தலாம். உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் உயிர் வாழ்ந்தபோதே அவரைத் தன் படத்தில் ஒரு கதாபாத்திரமாகச் சித்தரித்துப் படம் எடுத்தவர் சார்லி சாப்ளின். பாஜக ஆட்சியில்கூட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையை வெகுவாகக் கிண்டல் செய்து ஒரு படத்தை எடுத்து வெளியிட்டனர். அந்தப் படத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலும் ஆளும் கட்சியின் முழுப் பாதுகாப்போடு அந்த படம் வெளியானது.
ஆட்சியாளர்களைக் கிண்டல் செய்தால் அச்சுறுத்தல் என்ற நிலை எப்போதுமே ஜனநாயகத்துக்கு ஆபத்தாகும். அதேசமயம் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தனிப்பட்ட தாக்குதல்கள் எப்போதுமே ஜனநாயகத்துக்கு ஆபத்தானவை என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.