திருவண்ணாமலை மாவட்டம் கலச்பாக்கம் அடுத்த வீரலூர் கிராமத்தில் அருந்ததியர் மயானம் உள்ள பகுதியில் போதிய வசதிகள் இல்லை எனவும் நீண்டதூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் பொதுமக்களின் நலன் கருதி மாற்றுப்பாதயில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இருதரப்பினரையும் அழைத்து வருவாய் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பல முறை சமரச கூட்டங்கள் நடத்தினர்.
இந்நிலையில் நேற்று அருந்ததியர்கள் வசிக்கும் பகுதியில் உடல் நலக்குறைவால் பெண் ஒருவர் இறந்தார். அவரது சடலத்தை நேற்று மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல முடிவு செய்திருந்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் ஏற்கனவே செல்லும் பாதையில் தான் மயானத்திற்கு சடலத்தை கொண்டு செல்ல வேண்டும் வேண்டும் எனவும், புதிய பாதையில் செல்ல கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சாலையின் குறுக்கே முள்வேலிகளை அமைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் தகவல் அறிந்த எஸ்பி பவன் குமார். ஆரணி கோட்டாட்சியர் கவிதா, போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டும். மாற்றுப்பாதையில் சடலத்தை கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பொது மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சடலத்தை கொண்டு செல்ல மாற்றுப்பாதையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இரு தரப்பினரிடையே மோதல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டதால் பிரச்னைகளை தீர்க்க இருதரப் பினரையும் அழைத்து சமரசபேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த டிஐஜி ஆனி விஜயா நேற்றிரவு 7 மணியளவில் அங்கு வந்தார். அவரது தலைமையில் எஸ்பி பவன் குமார், கோட்டாட்சியர் கவிதா மற்றும் அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து தொடர்ந்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், அருந்ததியர்கள் வசிக்கும் பகுதியில் வீடுகள், வாகனங்களை சேதப்படுத்தியவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிகை எடுப்பதாகவும், ஏற்கனவே செல்லும் மயான பாதை விரைவில் சீரமைக்கப்பட்டு தேவையான வசதிகள் செய்து தரும் வரை மாற்றுப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படும் என டிஐஜி தெரிவித்தார். அதற்கு மற்றொரு தரப்பினர் முழு சம்மதம் தெரிவிக்காததால் தொடர்ந்து இழுபறி நீடித்துவருகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதி மக்களிடம் பேசுகையில், நேற்று எங்களை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திடீரென தாக்க வந்தனர் நாங்கள் அனைவரும் வீட்டினுள் சென்று கதவுகளை பாடிக்கொண்டும் வெளியில் உள்ள கண்ணாடிகள் மற்றும் கதவுகள் வாகனங்கள் உள்ளிட்டவைகளை கற்களால் தாக்கினர் பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி எங்களை தாக்கினர். மேலும் எங்கள் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது மற்றும் குடிநீர் தண்ணீர் இதுவரை வழங்கவில்லை நாங்கள் நேற்று இரவு முதல் உண்பதற்கு உணவு இன்றியும் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமலும் தவித்து வருகிறோம் வெளியே சென்று உணவுகள் வாங்கி வரலாம் என்று நினைத்தாலும் எங்களை பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் நாங்கள் எங்கள் பகுதியில் உள்ளோம் என்று தெரிவித்தனர்
இந்த நிலையில் இருதரப்பினரிடையே நடைபெறும் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் டிஐஜி தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் சரவணன், வருவாய் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் ஆகியோர் அமைதியை ஏற்படுத்தும் குழுவினை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் நிலைமை தீவிரம் அடையாமல் இருப்பதற்காக திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 4 மாவட்ட காவல்துறையினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.