தமிழ்நாட்டின் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
இன்று தமிழ்நாட்டின் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
ஜனவரி 18ஆம் தேதி தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஜனவரி 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஜனவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூர் 5 செ.மீ., அம்பத்தூரில் தலா 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நாகை, மரக்காணம் தலா 4 செ.மீ., கோத்தகிரி 3 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனராக செந்தாமரைக் கண்ணன் நியமனம் செய்யப்பட்டார். செந்தாமரைக் கண்ணன் இதற்கு முன்பு காலநிலை மைய இயக்குநராக இருந்தவர். தற்போது அந்தப் பதவி புவியரசனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
புவியரசன், கடந்த மாதம் சென்னையில் திடீரென மழை பெய்தபோது, வானிலையை சரியாக கணிக்க தவறிவிட்டோம் இருப்பதைக் கொண்டு இவ்வளவுதான் கணிக்க முடிந்தது என கூறியிருந்தார். அதுமட்டுமின்றி இதுதொடர்பாக முதலமைச்சருக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும், புவியரசன் ஓய்வு பெறவில்லை. எப்போதும் நிகழக் கூடிய மாற்றம்தான் இது என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்