நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரும் சாட்டை யூட்யூப் தளத்தை நிர்வகித்துவருபவருமான யூ-டியூப் பதிவர் துரைமுருகன் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  துரைமுருகன் உட்பட 4 பேரை திருச்சியில் போலீசார் கைது செய்து உள்ளனர்.




 


விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து திமுக ஆதரவாளரான வினோத் என்பவர் ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக கூறி, திருச்சியில் அவர் நடத்தும் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழ் தேசிய ஆதரவாளர்கள் என்று அறியப்படுபவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில்,  சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர், ட்விட்டரில் பிரபாகரன் குறித்து பதிவிட்ட வினோத்தை அதற்காக மன்னிப்பு கேட்க வைத்து, அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். வினோத் மனநலம் சரியில்லாதவர் என்றும், அவரது கடையை காவல்துறை முன்னிலையில் மூடிவிட்டதாகவும் பலர் ட்விட்டரில் பதிவிட்டனர்.


இந்நிலையில், இதற்கு திமுகவினரிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது, ட்விட்டரில் திமுகவினர் மற்றும் திமுக ஆதரவாளர்கள் வினோத்தை மிரட்டிய சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்சியாக ட்வீட்களை தட்டிய வண்ணம் இருந்தனர். அத்தோடு திமுக ஆட்சியில் திமுகவினருக்கே பாதுகாப்பு இல்லையா என்று கேட்டு உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோரையெல்லாம் டாக் செய்து கருத்து கூறிவந்தனர். 


இது குறித்து சம்பந்தப்பட்ட வினோத் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சாட்டை துரைமுருகன், சரவணன், சந்தோஷ், வினோத் ஆகிய நான்கு பேரையும் திருச்சி கே.கே.நகர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.






சட்டப்பிரிவு 143,447,294(b),506(2) of IPC அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாற்றுக்கருத்து கொண்டவருக்குப் புரிதல் ஏற்படும் வண்ணம் நேரடியாகச் சென்று விளக்கமளித்து அவருக்குப் புரிதலை ஏற்படுத்திக் காவல்துறை முன்னிலையில் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் புரிதலின் அடிப்படையில் மறுப்பு காணொளி வெளியிட செய்வதென்பது கருத்துரிமை சார்ந்த செயல்பாடு. இதை மாபெரும் குற்றம் எனக்கருதி, தம்பிகளை கைது செய்திருப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.  சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ள தம்பிகள் சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்துகிறேன் எனவும் அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்