தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைத்துள்ளது. தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 7-ந் தேதி முதல்வராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர் முதல்வராக பொறுப்பு ஏற்றுக்கொண்டது முதல் தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகளில் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது.


மாநில அரசு விதித்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் தமிழ்நாட்டில் கடந்த மாதம் 36 ஆயிரம் என்ற அளவில் இருந்த கொரோனா தினசரி பாதிப்பு தற்போது 16 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது. இதுமட்டுமின்றி கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு பணிகளிலும் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.




ஊரடங்கு காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு மாதத்தில் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உள்பட மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் 6 கடிதங்களை எழுதியுள்ளார்.


அவற்றில் முதல் கடிதமாக ராஜீவ்காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.


இந்த நிலையில், வரும் 17-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். அங்கு பிரதமர் மோடியை முதல்வர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அவர் டெல்லி செல்லும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த பேச்சுவார்த்தையின்போது, தமிழகத்தில் தற்போதுள்ள கொரோனா நிலவரம், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தேவைப்படும் தடுப்பூசிகளின் தேவைகள், செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைப்பது, கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தும் மருந்தை தமிழகத்திற்கு அதிகளவில் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார்.


இது மட்டுமின்றி, தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடப்பாண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், மருத்துவ படிப்பு உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்க உள்ளார். மேலும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை மு.க.ஸ்டாலின் சந்திப்பது இதுவே முதல் முறை ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க :முகப்பு செய்திகள் / தமிழ்நாடு கோயில் நில ஆக்கிரமிப்புகள் பாரபட்சம் இல்லாமல் அகற்றப்படும் - அமைச்சர் சேகர்பாபு