பஞ்சு மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், தேன் மிட்டாய் சாப்பிட்டிருப்பீர்கள். முட்டை மிட்டாய் சாப்பிட்டிருக்கிறீர்களா?... விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகிலுள்ள அப்பம்பட்டு கிராமத்தில் தான், இந்த புதுமையான இனிப்பு வகை கிடைக்கிறது. மேலே பொன் நிறத்திலும் நடுவே இளமஞ்சள் நிறத்திலும் சுடச்சுட கிடைக்கும் முட்டை மிட்டாயை பார்க்கும் போதே, நாவில் எச்சில் ஊறும்.




என்னதான் இல்லங்களில் தினம் தினம் புதுப்புது வகையான உணவுகளைச் சமைத்துப் பரிமாறினாலும் சில ஊர்களில் மட்டுமே செய்யப்படும் திண்பண்டங்களையும் உணவுப்பொருட்களையும் தேடித்தேடி போய் ருசிப்பது பலருக்கு அலாதி ப்ரியம். கோயில்பட்டி கடலைமிட்டாய், மணப்பாறை முறுக்கு, திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன், ஆற்காடு மக்கன் பேடா வரிசையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கு மற்றொருஅடையாளம் ஆகி வருகிறது  முட்டை மிட்டாய் எனும் புதிய வகை ரெசிபி.




கோட்டையின் அடையாளமாக விளங்கிய செஞ்சி தற்போது முட்டை மிட்டாயின் அடையாளமாகவும் மாறி வருகிறது. முட்டை மிட்டாயின் வரலாறு குறித்து உரிமையாளர் சையத் உஸ்மான் கூறுகையில்:-


“என் அப்பா சையத் அப்துல் கப்பார், முட்டை மிட்டாயை இங்கு அறிமுகப்படுத்தினார். இப்போது கடை இருக்கும் இடத்தில்தான் 1970ஆம் ஆண்டு சிறிய தொழிலாகத் தொடங்கினார். அதற்கு முன் இஸ்லாமியர்களின் சுபநிகழ்ச்சிகளிலும் பண்டிகைகளிலும்தான் இதைச் செய்துவந்தனர். பின் அந்தச் சுவையை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று தொடங்கிய முயற்சி தான் இந்த முட்டை மிட்டாய் கடை. எவ்விதமான மாவுப் பொருளும் இல்லாமல் உருவாக்கப்படுவதுதான் இந்த முட்டை மிட்டாயின் சிறப்பு.




பால், முட்டை, சர்க்கரை, நெய் ஆகியவையே இந்த மிட்டாயின் உட்பொருள்கள். நாங்க பாக்கெட் பாலைப் பயன்படுத்துவதில்லை. என் அப்பா தொடங்கியபோது இருந்த அதே தரத்தை நிலைப்படுத்த நேரடியாக விவசாயிகளிடம் பாலைக் கொள்முதல் செய்கிறோம்.




இந்த முட்டை மிட்டாயை என் அப்பா அவரது காலத்தில் கையால் செய்து வந்தார். இப்போது மெஷினில் செய்கிறோம். ஆனால், தரம் மாற்றப்படவில்லை. 1995 ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்கள் அதிகமாகவே, என் அப்பா பயன்படுத்திய அதே கடையைச் சற்று விரிவுபடுத்தியுள்ளேன். இந்த மிட்டாயைத் தயார் செய்வதற்கு இரண்டு நாள்களில் மொத்தமாக ஏழரை மணி நேரம் வரை ஆகும். பால்கோவா செய்வதுதான் முதல் நிலை. முதல் நாளில் 6 மணி நேரம் வரை இந்த நிலை எடுத்துக்கொள்ளும். மறுநாள் காலை 4.30 மணிக்கு அடுத்த செய்முறையைத் தொடங்குவோம். ஏனெனில், பால்கோவா சரியான பக்குவத்தில் இருக்க வேண்டும்.




பின்னர், மூலப்பொருள்களைச் சேர்த்து அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் சுவையான முட்டை மிட்டாய் தயாராகிவிடும். தயாரிக்கப்பட்ட முட்டை மிட்டாய், எவ்விதமான பதப்படுத்தும் முறை இல்லையென்றாலும், 5 நாள்கள் வரை நன்றாக இருக்கும். ஃப்ரீசரில் வைத்துப் பயன்படுத்தினால் ஒரு மாதம் வரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். ஆனால், நாங்கள் அவ்வாறு வைத்திருப்பதில்லை. அன்று செய்வதை அன்றைய தினமே விற்பனை செய்துவிடுவோம்.




குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பதால் பதப்படுத்தும் பொருள்களை நாங்கள் பயன்படுத்துவதில்லை. மலையனூர் அங்காளம்மன் கோயில், திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பக்தர்கள், செஞ்சிக்கோட்டையைச் சுற்றிப் பார்க்கவரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் இந்த முட்டை மிட்டாயை வாங்கி செல்கின்றனர்.



மேலும் செஞ்சி முட்டை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் கடந்த ஆண்டு இது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதாகவும் பின்னர் அதுகுறித்து இதுவரை எந்த முடிவையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாகவும் கூறும் கடை உரிமையாளர் சையது, புவிசார் குறியீடு வழங்கும் நடவடிக்கையை முதல்வர் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.