தமிழ்நாட்டில் எத்தனையோ விடுதலைப் போராட்ட வீரர்கள், இலக்கியவாதிகள், பொதுவுடைமைக் கொள்கை கொண்டவர்கள், பேச்சாளர்கள், சுயமரியாதைக் கொள்கை உடையவர்கள் இருக்கலாம். ஆனால், அது அனைத்தையும் ஒருங்கே உடைய ஒரு தலைவர் என்றால் அது தோழர் ஜீவா என்ற ஜீவானந்தம் தான்.



ஜீவாவின் பிறந்தநாள் நூற்றாண்டு கல்லறை காசிமேடு இந்து மயானத்தின் அருகே உள்ளது. சாலையோர நடைபாதை அருகே உள்ள அந்த கல்லறை கவனிப்பாரன்றி, இரும்பு கதவுகள் சேதமடைந்து, கல்லறைக்கு உள்ளேயும், வெளியேயும் குப்பைகள், உடைந்த மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்டவை குவிந்து கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.



 

இந்நிலையில் சென்னை காசிமேட்டில் சுகந்திர போராட்ட வீரர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் ஜீவானந்தம் மற்றும் ஏ.எஸ்.கிருஷ்ணசாமி நினைவிடம் மிகுந்த சேதமடைந்து இருந்ததை இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், கல்லறை மற்றும் நினைவிடத்தை தற்போது மிகச்சிறப்பாக புதுப்பித்து இருப்பதாகவும், இந்தப் பணியை செயல்படுத்திய தமிழ்நாடு அரசுக்கும், தலைமைச் செயலாளர் மற்றும் செய்தித்துறை இயக்குநர் இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும், தோழர் ஜீவா அவர்களின் பிறந்த நாளன்று நிறைவுற்றிருக்கும் இந்தப் பணி சிறக்க பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்வதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



 

 கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கு அடுத்துள்ள பூதப்பாண்டி என்னும் ஊரில் பட்டக்கார் 'பிள்ளை - உடையம்மாள்' ஆகிய தம்பதிக்கு 21.8.1907-ல் மகனாகப் பிறந்தார் ஜீவானந்தம். சிறுவயது முதலே இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்த ஜீவா, 10-ம்  வகுப்பு படிக்கும்போதே சுகுணராஜன், சுதந்திரவீரன் போன்ற நாவல்களை எழுதினார். நாடகங்ளை எழுதி இயக்கி அதில் நடிக்கவும் செய்தார். இலக்கியவாதியான அவர் இலக்கியச்சுவை, ஈரோட்டுப் பாதை சரியா, கலை இலக்கியத்தின் புதிய பார்வை, சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள் ஆகிய நூல்களை எழுதியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பாகும்.